பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்323

102.- நகுலன் கர்ணனைப் புறங்கொடுத்தோடச்செய்தல்.

சமரவேழ முகாசுரன்சாய்ந்தனன்
குமரனாலெனக் கோநகுலன்றனால்
அமரில்யானை யணிமுகத்தோடுமெய்
கமர்படப்புறந் தந்தனன்கன்னனே.

     (இ - ள்.) குமரனால் - முருகக்கடவுளால், சமரம் வேழம் முக(ம்) அசுரன் -
போர்வல்லயானைமுகத்தையுடைய தாரகாசுரன், சாய்ந்தனன் என-அழிந்தாற்போல,
கோநகுலன்தனால் - தலைமையையுடைய நகுலனால், கன்னன் - கர்ணன், அமரில்
-போரிலே, யானை அணி முகத்தோடு மெய் கமர் பட - (தான் முற்செலுத்திய)
யானையின் அழகிய முகமும் தன்உடம்பும் பிளப்படைய, புறந்தந்தனன்-
முதுகுகொடுத்தான்; (எ-று.)

     அசுரேசன்மகளாகிய மாயை யென்னும் பெயர்பெற்று சுரசையென்பவள்
காசியபமகாமுனிவரைக்கூடிப்பெற்ற புத்திரர்களாகிய சூரபதுமன் சிங்கமுகன்
தாரகன்என்ற மூவரும் பற்பலவகையாக உலகத்தை வருத்தினவளவில்,
அத்துன்பம்பொறுக்கமாட்டாத தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபிரான்
குமாரக்கடவுளைஉண்டாக்கி யனுப்ப, அக்கடவுள் தனக்கு உரிய கணங்களுடனே
புறப்பட்டுப்போருக்குச்செல்லும் வழியில், யானைமுகமுள்ளவனான தாரகாசுரன்
கிரௌஞ்சகிரியில்
நின்றுமாயையாற் கடும்போர்செய்ய, முருகமூர்த்தி,
அவ்வசுரனது துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து முடிவில்
அவ்வசுரனையும்அழித்தனன் என்பது, இங்குக் குறித்த வரலாறு;காசியபமுனிவனும்
அவனுக்குமனைவியான மாயையும் ஆண்யானை பெண்யானைவடிவங் கொண்ட
காலத்தில் அவர்களுக்குப்பிள்ளையாய் யானைமுகத்தோடுபிறந்தவனாதலால்,
தாரகன் 'வேழமுகாசுரன்' எனப்பட்டான். தமர்பட, சமர்படஎன்றும் பாடம்.

103.- சகதேவன் சகுனியைப் புறங்கொடுத்தோடச்
செய்தல்.

முன்னிடச்சமர் மோதுஞ்சகுனியை
மின்னிடைப்புயங்கம் வெருக்கொண்டெனத்
தன்னிடக்கைத் தனுவொடுந்தேரொடும்
மின்னிடப்பொரு தானவன்பின்னவன்.

     (இ-ள்.) அவன் பின்னவன் - (கீழ்க்கூறிய) நகுலனது தம்பியான சகதேவன்,-
முன் இட சமர் மோதும் சகுனியை - முற்படப்போர்செய்த சகுனியை, மின் இடை
புயங்கம் வெரு கொண்டுஎன- மின்னலினால் (இடியினால்) பாம்பு
அச்சங்கொண்டாற்போல, தன் இடக்கை தனுவொடுஉம் தேரொடுஉம் பின்னிட -
தனது இடக்கையிலேந்தியவில்லோடும் தேரோடும் புறங்கொடுக்கும்படி,
பொருதான் -போர்செய்தான்; ( எ- று.)

     மின்னிடை, இடை - மூன்றனுருபின்பொருளில் வந்தது; உருபுமயக்கம். (578)