குத் தம்பி என்றதில் உபலக்ஷணத்தால் அடக்கிக்கொள்க, விரோசனன் + கதிர்= விரோசனக்கதிர்; புரோசனன் + பெயர் = புரோசனப் பெயர். விரோசநனென்ற வடமொழிப்பெயர்-விசேஷமாய் விளங்குபவ னென்று அவயவப்பொருள்படும். கதிர் - சினையாகுபெயராய், கதிரோனை யுணர்த்தும். ரோஷணம்-கோபித்தல்; அதனோடு கூடுதல்-ஸரோஷணம்; அது தமிழில் சரோசனம்எனத் திரிந்தது. ரோசநம்-பிரகாசித்தல்: அதன்எதிர்மறை - அரோசனம். அரோசனத்துடன் என்பதற்கு - மகிழ்ச்சியின்மையோடு எனினுமாம். (580) 106.- பாண்டவர் பாஞ்சாலநகரிற் சிறப்புட னிருத்தல். முந்துபோரின் முதுகிடும்வேந்தரால் விந்தைதன்னையு மேதகவேட்டபின் அந்தமாநக ரைவருமாமனும் வந்தகண்ணனு மன்புடன்வைகினார். |
(இ-ள்.) முந்து போரில் - எதிர்த்துச்செய்த யுத்தத்திலே, முதுகு இடும்- புறங்கொடுத்த, வேந்தரால் - (துரியோதனன் முதலிய) அரசர்களால், (பாண்டவர்கள்),விந்தைதன்னைஉம்-ஜயலஷ்மியையும், மேதக வேட்டபின்- மேன்மைபொருந்தமணஞ்செய்தபின்பு, ஐவர்உம் -அந்தப்பஞ்சபாண்டவர்களும், மாமன்உம் -அவர்கள்மாமனான துருபதனும், வந்த கண்ணன்உம் - (அன்போடு பாண்டவர்களிடம்) எழுந்தருளிய கண்ணபிரானும், அந்த மாநகர்- அந்தப்பெரியபாஞ்சாலநகரில், அன்புடன் வைகினார் - (ஒருவர்க்கொருவர்) அன்போடு பொருந்தி யிருந்தார்கள்; (எ- று.) துருபதன் கொடுக்கத் திரௌபதியைப் பெற்று மணஞ்செய்தாற்போலத் துரியோதனாதியர் கொடுக்கச் சயலஷ்மியைப் பெற்று மணஞ்செய்தன ரென்பது முன்னிரண்டடிகளின் கருத்து 'வன்புடன்' என்றும் பாடம், (581) 107.- பின்பு திருதராட்டிரன் தருமனுக்கு அரசளிக்கக் கருதுதல். தும்பைசூடிய வேற்றுரியோதனன் வெம்புபோரின் முதுகிட்டுமீண்டபின் தம்பிகூறு தருமனுக்கீயுமாறு அம்பிகேய னமைச்சரொடெண்ணினான். |
(இ-ள்.) தும்பை - தும்பைப்பூமாலையை, சூடிய - தரித்த, வேல் - வேலாயுதத்தையுடைய, துரியோதனன்-, வெம்பு போரில்-கொடிய போரிலே, முதுகுஇட்டு - (பாண்டவர்க்குப்) புறங்கொடுத்து, மீண்டபின் - திரும்பிவந்தபின்பு, -அம்பிகேயன்-அம்பிகையின்மகனான திருதராட்டிரன், தம்பிகூறு தருமனுக்கு ஈயும்ஆறு- (தன்) தம்பியாகிய பாண்டுவினது (இராச்சிய) பாகத்தை (அவன்மகனான)தருமபுத்திரனுக்குக் கொடுக்கும்படி, அமைச்சரொடு எண்ணினான்- (தன்)மந்திரிகளுடனே ஆலோசித்தான்; தும்பைப்பூமாலை, போர்செய்வார்க்கு உரிய அடையாளப்பூ மாலையாம். தம்பிகூறு - பாதிராச்சியம்: இங்ஙனமே பாலபாரதத்தும் வியாசபாரத்தும் உள்ளது. அம்பிகேயன் - வடமொழித் தத்திதாந்தநாமம். (582) |