முறைப்படிவணங்குதலும், மங்கலச்சடங்குமுடிந்தபின் பேரியோரை வணங்குதலென்றவழக்கின்படி வணங்குதலுமாம். (591) 8.- பாண்டவர் கண்ணபிரானுடன் காண்டவப்பிரத்தஞ் சேர்தல். அங்கண்மாஞாலமுழுவதுங்கொடுத்தற் காயர்தம்பதியினங்குரித்த செங்கண்மான்முதலாங்கிளைஞரும்வயிரத்தேர்முதற் சேனையுந்தாமும், வெங்கண்மாசுணத்தோனெண்ணமெத்திசையும் வெளிப்பட வேந்தரைவரும்போய்த், தங்க மாதவத்தாற்காண்டவப்பிரத்தமென்னுமத்தழல்வன மடைந்தார். |
(இ-ள்.) வேந்தர் ஐவர்உம்-பாண்டவராசர்ஐந்துபேரும்,-அம்கண் மா ஞாலம் முழுவதுஉம் கொடுத்தற்கு- அழகிய இடமகன்ற பெரியபூமிமுழுவதையும் (தங்கட்குக்) கொடுக்கும்படி, ஆயர்தம்பதியின் அங்குரித்த - திருவாய்ப்பாடியி லவதரித்த, செம் கண்மால்-சிவந்தகண்களையுடைய திருமாலை [கண்ணனை], முதல் ஆம்- முதலாகக்கொண்ட, கிளைஞர்உம் - சுற்றத்தார்களும், வயிரம் தேர் முதல்சேனைஉம் வைரம்பொருந்தியதேர்முதலிய சேனைகளும், தாம்உம்-தங்களுமாக,-வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசைஉம் வெளிப்பட - கொடியகண்களையுடைய பெரும்பாம்பின் வடிவமெழுதிய கொடியையுடைய துரியோதனனது எண்ணம் எங்கும் வெளிப்படும்படி, தங்கள் மா தவத்தால் - தாங்கள் முற்பிறப்பிற்செய்த பெருந் தவத்தின் பயனால், காண்டவப்பிரத்தம் என்னும் அ தழல்வனம் போய் அடைந்தார்-காண்டவப்பிரத்தமென்று சொல்லப்படுகிற அந்தக்கொடியகாட்டிற் போய்ச்சேர்ந்தார்கள்; (எ - று.) இனிநிகழும்மகாபாரதயுத்தத்தில்பகையெல்லாம் தொலைத்துக் கண்ணபிரான் தருமனுக்கு நிலவுலகமுழுவதையுங் உரியதாகச் செய்தல்தோன்ற, 'ஞாலமுழுவதுங் கொடுத்தற்கு அங்குரித்தமால்' என்றார். கண்ணன் திருவவதரித்தது மதுரையிலாயினும் ஆதியிற் சிலபிராயமளவும் அத்தன்மைவெளிப்படாமலே உடனே திருவாய்ப்பாடிசேர்ந்து அங்குப்பிறந்தவனாகவே பிரசித்தி பெற்று வளர்ந்தன னாதலால், 'ஆயர்பதியினங்குரித்த' என்றார். ஆயர்பதி-கோகுலம். பாண்டவர். காண்டவப்பிரத்தமடைந்தபின், அதனை இந்திரப்பிரத்தமென்னுஞ் சிறந்த நகரமாக அமைத்து அதில் வீற்றிருந்து அரசுபுரிதல், நாரதமுனிவனருள்பெற்றுக் குடும்பகலகமின்றிவாழ்தல், அருச்சுனனது தீர்த்தயாத்திரையாலும் காண்டவ தகனத்தாலுமாகிய பெருமைகளை யடைதல், உபபாண்டவரும் அபிமந்யுவுமாகிய புத்திரரைப்பெறுதல். இராசசூயயாகஞ்செய்து மேம்படுதல் முதலிய பேறுகளையடைதலால், 'தங்கள்மாதவத்தால் அத்தழல்வனம் அடைந்தார்' என்றார். மிக்கபொறாமை கொண்ட துரியோதனன் தனது சூழ்ச்சிக்கு இணங்கிய தந்தையைக்கொண்டு ஏவி முன்பு இவர்களை வாரணாவதத்துக்கு அனுப்பியமைபோலவேஇப்பொழுதும் காண்டவப்பிரதத்துக்குச் செலுத்தினனென்ற கொடுமை பிரசித்தமாகவென்பது, மூன்றாமடியிற் குறித்தது. தேர்முதற்சேனை - இரத கச துரக பதாதி. 'வயிரத் தேர்மிசைச்சேனையும்' என்றும் பாடம். (592) |