பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்339

18.சிற்பவல்லபத்தின்மயன்முதலுள்ளதெய்வவான்றபதியரொருசார்,
வெற்பகமருவிவீற்றுவீற்றிருக்கும்விஞ்சையர்கின்னரரொருசார்,
அற்புதவடிவினுருப்பசிமுதலா மழகுடையரம்பையரொருசார்,
பொற்புடையமரர்பதியுமெய்ம்மகிழ்ந்துபொழிதருபொன்மலரொருசார்.

     (இ-ள்.) சிற்பம் வல்லபத்தின்-சிற்பத்தொழில் வல்லமையையுடைய, மயன்
முதல்- மயன் முதலாக, உள்ள-, வான் தெய்வம் தபதியர் பெருமையையுடைய
தெய்வத்தச்சர்கள், ஒரு சார் - ஒரு  பக்கத்திலும்,-வெற்பு அகம் மருவி-
மலையிடங்களிற் பொருந்தி, வீற்றுவீறு இருக்கும்-வெவ்வேறாகச் சிறப்புடனிருக்கிற,
விஞ்சையர்-வித்தியாதரர்களும், கின்னரர்-கின்னரர்களும், ஒரு சார்- ஒரு
பக்கத்திலும்,- அற்புதம் வடிவின்-(காண்பவர்க்கு) அதிசயத்தை விளைக்கிற
வடிவத்தையுடைய, உருப்பசி- முதல் ஆம் - ஊர்வசி முதலான, அழகுஉடை
அரம்பையர்-அழகையுடைய தேவமாதர்கள், ஒருசார்-ஒருபக்கத்திலும்,
(அந்நகரத்திலுள்ளார்கள்); பொற்பு உடை - அழகையுடைய, அமரர்-தேவர்களும்,
பதிஉம்- (அவர்கட்குத்) தலைவனான இந்திரனும், மெய் மகிழ்ந்து பொழிதரு-
மனம்மகிழ்ந்துசொரிகிற, பொன் மலர்-பொன்மயமான (கற்பக விருட்சத்தின்)
மலர்கள், ஒரு சார்-(அந்நகரத்து) ஒருபுறத்திலுள்ளன; (எ-று.)

     சிற்பம்-கோயில் வீடு முதலியன கட்டுந்தொழில். மயன்-அசுரர்களதுசிற்பி.
வித்தியாதரரும் கின்னரரும் மலையில்வாழ்பவராதலால், அவர்கட்கு
'வெற்பகமருவிவீற்றுவீற்றிருக்கும்' என்றஅடை மொழி கொடுக்கப்பட்டது. வீற்று-
வேறுபாடு. வீறு-வேறொருவர்க்கில்லாத சிறப்பு. கின்னரர் -
கிந்நரமென்னும்வாத்தியத்தைக் கையிற்கொண்டு பாடித்திரியும்தேவசாதியார்.
ரம்பையென்று ஒரு தேவமாதின்பெயராதலால், அதன் பன்மையாகிய
அரம்பையரென்பது தேவமாதர்க்குப் பெயராக வழங்கும். பொன்னுலகமாகிய
சுவர்க்கலோகத்தில் உள்ளவை யாவும் பொன்மயமாயுள்ளவையாதலால், அங்கு
உள்ளதேவதருக்களின்மலர் பொன்மலரெனப்பட்டது. இந்நகரத்தின் சிறப்புப்பற்றி,
பலரும்தம்தம் அழகிய நகரங்களை விட்டு இதில்வந்து தங்குகின்றன ரென
அறிக.அமராபுரியும் என்றும் பாடம்.                          (602)

19.வரையெலாமகிலுஞ்சந்தனதருவு மான்மதநாவியின்குலமும்
திரையெலாமுத்தும்பவளவண்கொடியுஞ்செம்மணிகளுமரகதமும்
கரையெலாம்புன்னைக்கானமுங்கண்டலடவியுங்கைதையங்காடும்
தரையெலாம்பொன்னும்வெள்ளியும்பழனவேலிசூழ்சாலியுங்கரும்பும்.

     (இ-ள்.)  வரை எலாம்-இந்நகரத்தைச்சார்ந்த)மலைகளிலெல்லாம், அகில்உம்-
அகில்மரங்களும், சந்தனம் தருஉம்-சந்தனமரங்களும், மான்மத நாவியின் குலம்உம்-
கஸ்தூரிகளின் கூட்டங்களும், திரைஎலாம்-(இந்நகரத்தைச் சேர்ந்த)
கடல்களிலெல்லாம், முத்துஉம் - முத்துக்களும், வள் பவளம் கொடிஉம்-
சிறந்தபவழக்கொடிகளும், செம்மணிகள்உம் - சிவந்தமாணிக்கங்களும், மரகதம்உம் -
பச்சையிரத்தினங்களும்,-கரை எலாம்-(அக்கடற்) கரைகளிலெல்லாம்,