பக்கம் எண் :

352பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்,)  கண்உறு பொருள்கள்யாஉம் - எதிர்ப்படுகிறபொருள்களையெல்லாம்,
கண்டு கண்டு - பார்த்துப்பார்த்து, உவகை கூர-மகிழ்ச்சிமிக,
எண்உறுகிளைஞரோடுஉம் - பெருமைபொருந்திய (தன்) சுற்றத்தாருடனும், யாதவ
குமரரோடுஉம் - (கண்ணபிரானுடன் வந்த) யதுகுலகுமாரர்களுடனும், பண் உறு
வேதம் வாழ்நர் பலரொடுஉம் - ஸ்வரமமைந்த வேதங்களுக்கு உரியராய்
வாழ்கின்றபல  அந்தணர்களுடனும், ஆங்கண் வைகி - அந்நகரினிடத்திற்சேர்ந்து
தங்கி,(பின்பு), விண் உறு தபதிக்கு விடை கொடுத்தருளினான் - தேவலோகத்திற்
பொருந்திய சிற்பியான விசுவகருமனுக்கு அருளோடு அனுமதிதந்து அவனை
அனுப்பினான்; (எ-று.)-இங்குச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தருமனென்ற எழுவாய்
வருவிக்க. அம்ம - உரையசை.                                 (622)

39.-கண்ணன்முதலியோர் செல்லுதலும், தருமனது
அரசாட்சியும்.

கேசவன்முதலாவுள்ள கிளைஞருங்கேண்மைதப்பா
வாசவன்முதலினோரு மன்னுதம்பதிகள்புக்கார்
ஓசவன்றிகிரியோச்சி யுதயபானுவுக்குமேலாந்
தேசவன்றானும்வையந் திசைமுறைதிருத்தியாண்டான்.

     (இ-ள்.) கேசவன் முதல் ஆ (க) உள்ள - திருமாலின் திருவவதாரமான
கண்ணபிரான் முதலாகவுள்ள, கிளைஞர்உம் - சுற்றத்தார்களும், கேண்மை தப்பா
வாசவன் முதலினோர்உம் - உறவுமுறைமைக்குஉரிய உதவியில் தவறுதலில்லாத
இந்திரன் முதலானவர்களும், மன்னு தம் பதிகள் புக்கார் - நிலைபெற்ற தம் தமது
நகரங்களுக்குச் சென்றார்கள்; உதயபானுவுக்குஉம் மேல் ஆம் தேசவன்தான்உம்-
உதித்துவிளங்குகிற சூரியனினும் மேலான ஒளியையுடையவனாகிய தருமனும்.
ஓசம்வல்திகிரி ஓச்சி - ஒளியையும் வல்லமையையுமுடைய (தனது)
ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்தி, வையம்-பூமியை, திசை முறை திருததி ஆண்டான்
-எங்கும் நீதி முறைமை ஒழுங்காக நடக்கச்செய்து அரசாண்டான்; ( எ- று.)

     தன்மகனான அருச்சுனனுக்கும், அவனது உடன்பிறந்தவர்களான தருமன்
முதலியோர்க்கும் உதவுமாறு. இந்திரன் நகரமமைப்பித்தமைபற்றி, 'கேண்மைதப்பா
வாசவன்' என்றார். கேஸவ னென்ற வடமொழி - பிரமனையும் சிவனையும் தன்
அங்கத்திற்கொண்டவ னென்றும் (க-பிரமன், ஈசன்-சிவன்) மயிரழகையுடையவ
னென்றும் (கேசம்-மயிர்), கேசியென்னும் அசுரனைக்கொன்றவனென்றும் [கேசி-
கண்ணனைக்கொல்லும்படிகம்சனால்ஏவப்பட்டுக் குதிரைவடிவத்தோடுவந்த ஓர்
அசுரன்) பொருள்படும். ஓசம், தேசு=ஓஜஸ், தேஜஸ் என்ற வடசொற்களின்
விகாரம்.கேசவன் பதி-துவாரகை. வாசவன்பதி-அமராவதி.          (623)    

40.- ஒருநாள் நாரதமாமுனிவன் அங்குஎழுந்தருளல்.

யாய்மொழிதலைமேற்கொண்டு மிளையவர்மொழிகள்கேட்டும்
வேய்மொழிவெய்த்தோள்வல்லி மென்மொழிவிரும்பலுற்றும்
வாய்மொழியறத்தின்மைந்தன் மாநகர்வாழுநாளில்
ஆய்மொழிப்பாடல்யாழோ ரந்தணனாங்கண்வந்தான்.