பக்கம் எண் :

358பாரதம்ஆதி பருவம்

1.-தருமபுத்திரனது நீதிதவறாத அரசாட்சி.

துன்பம்பய மிடிநோய்பகை சோரங்கொலை யெய்தாது
இன்பம்பொரு ளறன்யாவையு மியல்பாதலி னெய்தித்
தன்பைங்குடை நிழன்மன்பதை தரியார்முனை மதியா
வன்பன்றனை நிகர்வாழ்வுற வருநாள்களி லொருநாள்.

இதுவும் அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) தரியார் முனை மதியா வன்பன் - பகைவர்களுடைய
போர்த்திறத்தைப் பொருள்செய்யாத வலிமையையுடையவனான தருமபுத்திரன்,-தன்
பைங் குடை நிழல் - தனது குளிர்ந்த குடை நிழலின்கீழுள்ள, மன்பதை-சனங்கள்,
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது-துன்பம் அச்சம் வறுமை
வியாதி பகை களவு கொலை ஆகிய இத்தீங்குகளை அடையாமல், இன்பம் பொருள்
அறன் யாவைஉம் இயல்பு ஆதலின் எய்தி-இன்பம் செல்வம் தருமம் ஆகிய
இவையனைத்தையும் இயல்பாக அடைந்து, தனை நிகர் வாழ்வு உற-தன்னையொத்த
இனியவாழ்க்கையையடையும்படி, வரும்-அரசுசெய்துவருகிற, நாள்களில் -
தினங்களுள், ஒரு நாள் -ஒருதினத்தில்,-(எ-று.)- "திருவாயின்மருங்கே***
ஒருவைதிகமுனி வந்து புகுந்தான்" என் அடுத்த கவியோடுமுடியும்.

     நீதிதவறாத ஆளுகையைக்  குடைநிழ லென்றல்  மரபு:  தனை
நிகர்வாழ்வுஎன்பது - அரசனாகிய தருமனது  வாழ்க்கையையொத்த  
வாழ்க்கை யென்றும், வேறு ஒப்புமையில்லாமையால் தன்னைத் தானே யொத்த
வாழ்க்கை யென்றும்பொருள்படும்.

     இனி இருபது கவிகள்-பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.          (632)

2.- தருமனது அரண்மனைவாயிலில்  ஓர் அந்தணன்வந்து
முறையிடல்.

அறையோதவனஞ்சூழ்புவியரசானவனைத்தும்
திறையோடிடமறநிற்பதொர் திருவாயின்மருங்கே
இறையோடுயரிருகையு மெடுத்தெண்ணுறமுறையோ
முறையோவெனவொருவைதிக முனிவந்துபுகுந்தான்.

     (இ-ள்.) அறை - ஒலிக்கின்ற, ஓதம் - அலைகளையுடைய, வனம்- (கடலின்)
நீரினால், சூழ் - சூழப்பட்ட, புவி-பூமியில், அரசு ஆன அனைத்துஉம் -
அரசர்களாகவுள்ள எல்லோரும், திறையோடு - (தாம்-தாம் செலுத்தவேண்டிய)
திறைப்பொருள்களுடனே, இடம் அற நிற்பது - வெற்றிடமில்லாதபடி
[இடம்போதாதபடி] (நெருங்கி) நிற்கப்பெற்ற, ஒர்-ஒப்பற்ற, திரு வாயில்மருங்குஏ-
சிறந்த அரண்மனைவாயிலின் புறத்தே, - ஒரு வைதிக முனி-
வேதவொழுக்கத்தையுடையவனான  ஓர் அந்தணன், இறையோடு-
வருத்தத்துடனே, உயர் இரு கைஉம் எடுத்து -இரண்டுகைகளையும் உயர எடுத்து,
எண் உற - (காண்பவர் இது என்னகாரணம் பற்றியதோ? என்று)
ஆலோசிக்கும்படி, முறையோ முறையோ  என- 'இது முறையோ' என்று
குறைகூறி முறையிட்டுக்கொண்டு, வந்து புகுந்தான்- வந்துசேர்ந்தான்; (எ-று.)