மனவுறுதியைத் தெரியப்படுத்த, 'வெறுத்தெனை முனியினும் இதுவேண்டும்' என்கின்றானென்க. ஆல் - அசை. (61) 54.- கங்காதேவி அரசன்செயலைக் கண்டித்துக் கூறுதல். என்றுபற்பலமொழி யிவனியம்பவே நன்றுநன்றவனிப நவின்றவாசகம் இன்றுநின்றிரங்கினை யெழுவர்மைந்தரைக் கொன்றவன்றென்செய்தாய் கொடியையென்னவே. |
(இ - ள்.) என்று-, பல் பல மொழி - பலபடியான வார்த்தைகளை, இவன் - இந்தச்சந்தனுராசன், இயம்ப - சொல்ல,- (அது கேட்ட கங்காதேவி மன்னவனை நோக்கி),-'அவனிப - மன்னவனே! நவின்ற - (நீ) கூறிய, வாசகம் - சொல், நன்று நன்று - மிகநன்றாயிருந்தது: இன்று-, நின்று - மனத்திலுறுதிகொண்டிருந்து, இரங்கினை- (பிள்ளை யிறப்பதற்கு) இரக்கமுற்றாய்: எழுவர் மைந்தரை கொன்ற அன்று-ஏழுபுத்திரர்களை (நதிப்புனலிலே வீசியெறிந்து) கொன்ற அவ்வப்போது, என் செய்தாய்- என்னசெய்தாய்? கொடியை - கொடுமையையுடையாய்,' என்ன - என்றுபழித்துக்கூற,- (எ-று.) "அரசனுமுணர்ந்து" என மேற்கவியோடு குளகமாகத் தொடரும். எழுவர்மைந்தரைக் கொன்றஅன்று என்செய்தாய் என்றது - இப்போது எட்டாவது குழந்தைக்காகக்கொண்ட இரக்கம் அப்போது எல்லாம் எங்கே போய்விட்டது? என்றவாறு. அரசன் கங்கையைப் பழித்தாற்போலக் கூற,அன்னாள் மறித்துப்பழித்தாளென்க. நன்று நன்று - இகழ்ச்சிக்குறிப்பு: அடுக்கு, வெகுளிபற்றியது. (62) 55.- அப்போது அரசன்மனத்து உணர்ச்சிதோன்றி அந்தத் தேவியை 'நீ யார்? பெற்ற புதல்வரைக் கொன்ற காரணம் என்?' என்றுவினவ, கங்கையாள் கூறத்தொடங்குதல். அரசனுமுணர்ந்து நீ யார்கொல்பாலரைத் திரைசெறிபுனலிடைச் செற்றதென்கொலாம் உரைசெயவேண்டுமென் றுரைப்பவஞ்சியும் வரிசையினுயர்ந்ததன் வரவுகூறுவாள். |
(இ-ள்.) அரசன்உம் - சந்தனுவும், உணர்ந்து -உணர்ச்சியடைந்து [மனத்திடையாராய்ச்சி தோன்றப்பெற்று என்றபடி], 'நீ யார் கொல்-? பாலரை - (பெற்ற) புதல்வரை, திரை செறி புனலிடை - அலைநெருங்கிய வெள்ளநீரிலே, செற்றது - உயிர்நீங்குமாறு எறிந்தது, என் கொல் ஆம் - என்னகாரணம்பற்றியாகும்? உரை செய வேண்டும் - (இவ்விஷயங்களைக்) கூறவேண்டும்' என்று உரைப்ப - என்று கூற, வஞ்சிஉம்- வஞ்சிக்கொடிபோன்ற கங்காதேவியும், வரிசையின் உயர்ந்த - பெருமையினால் மேம்பட்ட, தன் - தன்னுடைய, வரவு - (இவ்வுலகத்து) வந்துபிறந்த சரிதையை, கூறுவாள் - சொல்பவளானாள்; (எ -று.) வரவு - தொழிலாகுபெயரால், வருதலைக்கொண்ட சரிதையையுணர்த்தும். (63) |