56.- இதுமுதற் பதினெட்டுக்கவிகள் - ஒருதொடர்: கங்காதேவி தன்சாபவரலாறு முதலியவற்றைச் சந்தனுவிடம் கூறுதலைத்தெரிவிக்கும். வான்முகமதியமும் புதியமாலிகைக் கான்முகவிதழியுங் கமழுங்கங்கையாள் தேன்முகம்பொழிதரு செய்யதாமரை நான்முகன்பேரவை நண்ணினாளரோ. |
(இ - ள்.) வால் - வெள்ளிய, முகம் மதியம்உம் - ஆரம்பமான (ஒற்றைக்கலைப்பிறையான) சந்திரனும், புதிய மாலிகை கான் முகம் இதழிஉம் - புதிய மாலையாகக்கட்டப்படுகின்ற நறுமணத்தைத் தன்னிடத்தேயுடைய கொன்றையும், கமழும் -நறுமணம்வீசுகின்ற, கங்கையாள் - கங்காதேவி,- தேன்முகம் பொழிதரு - தேனை (த்தன்) வாயினின்று பெருக்குகின்ற, செய்ய தாமரை - செந்தாமரை மலரில்(வீற்றிருப்பவனான), நான்முகன் - பிரமதேவனுடைய, பேர் அவை - பெருமைபெற்றசபையை, (ஒருகாலத்து), நண்ணினாள் - கிட்டினாள்;(எ-று.)- இச்செய்யுள் கங்காதேவியின் பெண்தெய்வம் சத்திய லோகத்திலே பிரமனதுசபையிலே சென்றமை கூறியது. சிவபெருமானது சடைமுடியில் கங்கை உறைபவளாதலால், அவளிடத்து மதியமும் இதழியும் கமழுமென்க. கங்கையாள், முன் நிகழ்ந்த சரித்திரம் கூறத் தன்னைப் படர்க்கையாகவைத்துப் பேசுகின்றாள். இதழிகமழுங்கங்கையாள் என்பது ஏற்குமாயினும், 'மதியங் கமழும் கங்கையாள்' என்றது - உபசாரவழக்காகும். முக மதியம் - முகத்துக்கு உவமையாகுஞ் சந்திரனென்றும், வான் - வானத்திலுள்ள என்றும் உரைப்பாருமுளர். அரோ - ஈற்றசை. (64) 57. | இருங்கலையிமையவ ரெதிரிறைஞ்சுவாள் மருங்கலைமதியினை மதிக்குமாறுபோல் அருங்கலையயலுற வதிர்ந்துவீசினான் பொருங்கலையெனுமிகற் புரவிவீரனே. |
(இ - ள்.) பொரும் - போர்செய்யவல்ல, கலை எனும் - கலைமானென்கிற, இகல்புரவி - வலிமையுள்ள வாகனத்தைக் கொண்ட, வீரன் - வீரனாகிய வாயுதேவன், இருகலை இமையவர் - மிக்க கல்வியையுடைய தேவர்களின், அலை மதியினை -சஞ்சலமான புத்தியை, மதிக்கும் ஆறுபோல் - அளவிட்டு அறியுந் தன்மைபோல,-எதிர்- பிரம தேவனெதிரிலே, இறைஞ்சுவாள் - வணங்குபவளான கங்கையினுடைய,மருங்கு - இடையிலே தரித்துள்ள, அருகலை- அருமையான ஆடையை, அயல்உற- (உள் அவயவந்தெரியும்படி) அப்பாற் செல்ல [சிறிதுவிலக] அதிர்ந்து -ஒலிசெய்துகொண்டு, வீசினான்-; (எ -று.) தேவர்களின் புத்தி எவ்வாறாயுள்ளது என்று மதித்து அறிதற்கு அந்தக்கங்காதேவியின் உடுத்த ஆடையை வாயுதேவன் விலகச்செய்வது காரணமாகுமாதலால், இமையவர் மதியினைமதிக்கு மாறுபோலென்று பயன்தற்குறிப்பேற்றவணியாகக் கூறினார். மூன்றாமடியில், கலை - வஸ்திரம். மானத்தைக் காத்து நிற்பதாதலால், 'அருங்கலை' எனப்பட்டது. வாயுதேவனுக்குக் கலைமான் வாகன |