அவர்கள் 'முன் இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது என்ன? பிறர் எவரேனும் இந்த இடைகழியிற் புகுந்தவர் உண்டோ?' என்று சங்கிக்கையில், பொய்கையாழ்வார், பூமியாகிய தகழியில் கடல்நீரையே நெய்யாகக்கொண்டு சூரியனைவிளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தைநெய்யாகவும்சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற, இவ்விரண்டின் ஒளியாலும்இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம் கண்டமை கூறியவளவிலே,மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக் கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்துஆனந்தமடைந்து, அப்பெருங்களிப்பு உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரை வாழ்விக்கக்கருதி, பொய்கையாழ்வார் "வையந்தகளியா" என்று தோடங்கி முதல்திருவந்தாதியைப் பாடியருள, பூதத்தாழ்வார் "அன்பே தகளியா" என்று தொடங்கி இரண்டாந்திருவந்தாதியை அருளிச் செய்ய,பேயாழ்வார் "திருக்கண்டேன்" என்று தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத் திருவாய்மலர்ந்தருளினார் என்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை. (647) 17.- திருவெண்ணெய்நல்லூரையும், திருவதிகையையும் திருவயிந்திரபுரத்தையும் தரிசித்தல். ஐயானனனியல்வாணனை யடிமைக்கொளமெய்யே பொய்யாவணமெழுதும்பதி பொற்போடுவணங்கா மெய்யாகவதிகைத்திரு வீரட்டமுநேமிக் கையாளனகீந்திரபுரமுங் கண்டுகைதொழுதான். |
(இ-ள்.) ஐ ஆனனன் - ஐந்து திருமுகங்களை யுடையவனான சிவபிரான், இயல்வாணனை - இயற்றமிழ்ப்புலவரான சுந்தரமூர்த்தி நாயனாரை,- அடிமை கொள -ஆட்கொள்ளும்பொருட்டு, பொய் ஆவணம் - பொய்யாகிய அடிமையோலையை,மெய் ஏ எழுதும் - மெய்போலவே எழுதிய, பதி - தலத்தை [திருவெண்ணெய்நல்லூரை], பொற்போடு வணங்கா - அழகா வணங்கி,- மெய் ஆகமம் அதிகை திரு வீரட்டம்உம் - உண்மையான ஆகமங்களிற் கூறப்பட்ட விதிப்படி அர்ச்சிக்கப்படுகிற திருவதிகை வீரட்டானத்தையும், நேமி கை ஆளன் அகீந்திரபுரம்உம் - சக்கராயுதத்தையேந்திய திருக்கையை யுடையவனான திருமாலினது திருவகீந்திரபுரத்தையும், கண்டு - தரிசித்து, கை தொழுதான் - கைகூப்பி வணங்கினான்; (எ-று.) திருவெண்ணெய்நல்லூர்ச் சிவபிரான் திருநாமம் - தடுத்தாட் கொண்ட ஈசுவரர்;அம்பிகை-வேற்கண்மங்கையம்மை. திருவதிகைச் சிவபிரான் திருநாமம் வீரட்டானேசுவரர்; அம்பிகை - திருவதிகை நாயகி; திருவகீந்திரபுரத்துத் திருமால் -தேவநாதன்; தாயார் - ஹேமாப்ஜவல்லி. திருப்பதிகளைக் கூறினும், திருப்பதிகளிலுள்ள பெருமான்களை வணங்கினதாகவே கருத்து. இத் தலங்கள் - நடுநாட்டிலுள்ளவை. |