பக்கம் எண் :

372பாரதம்ஆதி பருவம்

அதிசயிக்க, சிவபிரானதுகட்டளைப்படி சுந்தரமூர்த்தி அவர்க்கு அடியவராய்
வன்தொண்டரென்று பெயர்பூண்டு விவாகந்தவிர்ந்து திருப்பதிகங்கள்
பாடுவாராயினரென்பது, தடுத்தாட்கொண்டவரலாறு.                (648)

18.-சிதம்பரஞ்சேர்ந்து நடராசப்பெருமானைத் தரிசித்தல்.

*இன்னம்பலபலயோனியி லெய்தாநெறிபெறவே
முன்னம்பலரடிதேடவு    முடிதேடவுமெட்டா
அன்னம்பலபயில்வார்புன லணிதில்லையுளாடும்
பொன்னம்பலநாதன்கழல் பொற்போடுபணிந்தான்.

     (இ-ள்.) முன்னம் - முற்காலத்தில், பலர் - பல தேவர்கள் அடி தேடஉம்
முடிதேடஉம் - திருவடியைத் தேடவும் திருமுடியைத் தேடவும், எட்டா -
(அவர்கட்கு)எட்டாமல் பெருவடிவங் கொண்டிருந்தவரும், அன்னம் பல பயில்
வார் புனல் அணிதில்லையுள் ஆடும் பொன் அம்பலம் நாதன் - அன்னப்
பறவைகள் பல தங்கப்பெற்றமிக்க நீர்வளத்தையுடைய அழகிய சிதம்பர தலத்திலே
திருநடனஞ்செய்கின்றகனகசபைக்குத் தலைவருமான சிவபிரானுடைய, கழல் -
திருவடிகளை, (அருச்சுனன்), இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறஏ -
தான் மீண்டும் பற்பலவகைப்பட்டபிறப்புக்களிற் பிறவாத தன்மையை அடையும்படி
[முத்திபெறும்படி], பொற்போடு பணிந்தான் - அழகிதாக வணங்கினான்; (எ-று.)-
இங்குச் சிவபிரான் திருநாமம் - சபாநாயகர்; அம்பிகை-சிவகாமியம்மை.

     தில்லை யென்ற தலம் -எல்லாச் சிவதலங்களுள்ளும் தலைமையானது;
கோயிலென்னும் மறுபெயருடையது: சோழநாட்டில் காவேரிக்கு வடக்கில் உள்ளது;
இச்சிதம்பரதலமுள்ள இடம், ஆதியில் தில்லையென்னும் மரம் அடர்ந்த
காடாயிருந்ததனால், 'தில்லை ' என்று பெயர்பெறும். பிரமன் அன்னப்
பறவைவடிவமாய் முடியைக்காண விண்பறந்தும், விஷ்ணு பன்றியுருவமாய்
அடியைக்காண மண்ணிடத்துஞ் சென்று பலகாலம் தேடியும் முடியடிகளைக்
காணாமற்போயின ரென்ற கதையை உட்கொண்டு இரண்டாமடி வந்தது. இங்கு
இவர்களை 'பலர்' என்றது, தமிழ்முறையால். இச்செய்யுளின் இரண்டாமடி
"முன்னம்பலர்நறுமாமலர் முறைதூய் மகிழ்வெய்த" என்று ஏடுகளிற்
காணப்படுகிறது.பொன்னம்பலம் - பொன்மயமான சபை; இது, பஞ்சசபைகளுள்
ஒன்று: அவையாவன- கனகசபை சிதம்பரத்திலும், இரசதசபை மதுரையிலும்,
தாமிரசபைதிருநெல்வேலியிலும், இரத்தினசபை திருவாலங்காட்டிலும், சித்திரசபை
திருக்குற்றாலத்திலு மெனக் காண்க.                                (649)


     *இச்செய்யுளின் பின், அடியில் வருகிற செய்யுளொன்று ஏடுகளிற்
காணப்படுகிறது:-

           "மாவிந்தையுநிலமங்கையுமலர்மாணடிவருடத்
          தாவும்மரவணைமேல்விழிதுயிலுந்தனிமுதலைப்
          பூவுந்தியபொழில்சூழ்தரு பொற்சித்திரகூடக்
          கோவிந்தனையடிபன்முறைதொழுதுட்களிகொண்டான்."