பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்379

உம்-செந்நிறமான அதரத்ததையும், வெள் நகைஉம் - வெண்ணிறமான பற்களையும்,
பார்வை என்னும் நஞ்சு அம்புஉம் - கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய
அம்பையும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழிஉம் - அமிருதம்போன்ற மிக்க
இனிமை மேல்மேலுண்டாகப் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாண்உம்-
நாணமென்னுங் குணத்தையும், பூணும்கச்சின்கண் அடங்காத கன(ம்) தனம்உம் -
தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண் இடைஉம்-
நுண்ணியஇடையையும், கண்டு- பார்த்து, சோர்ந்து- மனந்தளர்ந்து, பிச்சன் போல்
ஆயினன் - பித்துக்கொண்டவன் போலாயினான்; (எ-று.)

     தன்வசந்தப்பிக் காமவசத்தனாயினனென்பது, 'பிச்சன்போலாயினன்' என்பதன்
கருத்து. 'சுருங்கச்சொல்லல்' என்னும் அழகு பற்றி 'கண்டு' எனப் பொதுப்படக்
கூறினாராயினும், 'ஏற்புழிக் கோடல்' என்னும் உத்தியால், மொழிகண்டு -
பேச்சைகேட்டு எனக்கொள்க. பார்வையின் கொடுமையும் கூர்மையும் பற்றி,
நச்சம்பென்றார்; அன்றியும், கரிய மை யிட்ட கூரிய கண்ணுக்குக் கரியநஞ்சுதீற்றிய
கூரிய அம்பு உவமையாம்.                                      (656)

26.-சித்திராங்கதை பூக்கொய்து ஒருசெய்குன்றிற் சேர்தல்.

புத்திரர்வேறில்லாதுபுரிவரிய தவம்புரிந்துபூமிவேந்தன்
சித்திரவாகனன்பயந்தசித்திராங் கதையென்னுஞ்செஞ்சொல்வஞ்சி
பத்திரமுநறுமலருமவயவம்போல் விளங்குவனபலவுங்கொய்து
மித்திரமாமகளிருடன்விரவியொரு செய்குன்றின்மேவினாளே.

     (இ-ள்.) பூழிவேந்தன் சித்திரவாகனன் - பாண்டியகுலத்துக்குத் தலைவனான
சித்திரவாகன னென்னும் அரசன், புரிவு அரிய தவம்புரிந்து-செய்தற்கு அருமையான
தவத்தைச்செய்து, புத்திரர் வேறு இல்லாது பயந்த-வேறுபுதல்வரில்லாமற்
பெற்ற[தனிமகளான], சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி- சித்திராங்கதை
யென்னும் பெயருள்ள இனிய சொற்களையுடைய வஞ்சிக் கொடிபோன்ற
பெண்ணானவள்,-அவயவம் போல் விளங்குவன பத்திரம்உம் நறுமலர்உம் பலஉம்
கொய்து - (தனது) உறுப்புக்கள் போல விளங்குவனவான தளிர்களும்நறுமணமுள்ள
பூக்களுமாகிய பலவற்றையும் பறித்துக்கொண்டு, மா மித்திரம் மகளிருடன் விரவி -
சிறந்த தோழிப்பெண்களுடன் கூடி, ஒருசெய்குன்றில் மேவினாள்- ஒரு செய்குன்றிற்
போய்ச்சேர்ந்தாள்; (எ-று.)

     பூழியர்-பாண்டியர். சித்ரவாஹநன்என்ற வடமொழிப்பெயர் -
அழகியவாகனத்தை யுடையவ னென்றும், சித்ராங்கதா என்ற வடமொழிப்பெயர் -
அழகிய தோள்வளைய யுடையவ ளென்றும் பொருள்படும். செய்குன்று -
இயற்கையாக அமைந்த மலையன்றிப் பிற்காலத்தில்விளையாட்டுக்காக மலைபோல்
அமைக்கப்பட்ட இடம்.

27.- அருச்சுனன் அவளெதிரில் தனியே சென்று நிற்றல்.

முன்னுருவந்தனைமாற்றிமுகில்வாகன் றிருமதலைமோகியாகித்,
தன்னுருவந்தனைக்கொண்டுசாமனிலுங் காமனிலுந்தயங்குமெய்யோன்,