மலையையும் அழகிய திரிகோணமலையையும் (இவற்றில் எது கனம் பொருந்திய தென்று) நிறுத்து வரையறை செய்யுமாறு, கோகநதன் அமைத்த - பிரமன் நாட்டிய, துலை கோல்உம் - தராசுகோலையும், போலும் - ஒக்கும்; (எ-று.) தற்குறிப்பேற்றவணி. இரண்டுபக்கத்தும் அலைபிரிந்து மோத இடையிலே பொருந்திய நீண்ட சேது, இருதிறத்துயானைகள் ஒன்றோடொன்று மோதாதபடி அவற்றினிடையிலிட்ட காவல்தடை மரம்போலுமென்க. பாலபாரதத்திலும் "உபயோரபிபாகயோர ஜஸ்ரம் - மிலதாம் அர்க்களம் ஊர்மிகுஞ்ஜராணாம் லவணாம்புநிதௌ விலோக்யஸேதும்" என்று இங்கு முதலடியிற்குறித்த உவமை வந்துள்ளது. வாயுதேவன் பெயர்த்துத் தள்ளிய மேருமலையின் மூன்று சிகரங்களே இலங்கைநகர்க்கு இருப்பிடமான திரிகூடமென்பது இரண்டாமடியில் அறிதற்குரியது. முக்கோணக்குன்று - திரிகோணாசலம்; இது - இலங்கைத்தீவிலுள்ள தேவாரம் பெற்ற சிவதலமிரண்டில் ஒன்று. அகஸ்தியமகாமுனிவன் சிவபிரானோடொத்த மகிமையுடையவனாதலால், அவனிருக்கிற பொதியமலையும் சிவபிரானிருக்கிற கைலாசகிரியின் கொடு முடியான திரிகோணமலையும் தம்மிலொத்தனவாய்ச் சீர்தூக்குதற்கு ஏற்றன வென்க. கோகநதம் - தாமரை; இவ்வடசொல் கோகம் - சக்கரவாகப்பறவைகள், நதம் - கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும். கோகநதன் - தாமரையில் வாழ்பவன். (677) 47.-அருச்சுனன் சிலதீர்த்தங்களில் நீராடி மேல்கடல் சேர்தல். அண்டர்தமகங்கையினும்வரனுண்டென்றென் றரம்பையரோட வனியில்வந்தாடுங்கன்னித், தண்டுறையுந்தண்பொருநைப்பாவநாசத்தடந்துறையும் படிந்துநதித்தடமேபோந்து, பண்டுமழுப்படையோனம்மழுவாற்கொண்டபாக்கியபூமியுஞ் சேரன்பதிகளியாவும், கண்டுமனங்களிகூரச்சென்றுமேலைக்கடல்கண்டானுரகதலங் கண்டுமீண்டான். |
(இ-ள்.) உரக தலம் கண்டு மீண்டான் - நாகலோகத்துக்குச் சென்று அதனைக்கண்டு திரும்பிவந்தவனான அருச்சுனனானவன்,- அண்டர் - தேவர்கள்,தம கங்கையின்உம் வரன் உண்டு என்று என்று - தங்களுடையகங்காநதியைக்காட்டிலும் மேன்மையுள்ள தென்று எண்ணியும் சொல்லியும், அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும்-தேவமாதர்களுடனே பூமியில் வந்து ஸ்நாநஞ்செய்யப்பெற்ற, கன்னி தன் துறைஉம்- கன்னியாகுமரியென்னும் நதியினது குளர்ச்சியான துறையிலும், தண் பொருநை பாவநாசம் தட துறை உம் - குளிர்ச்சியான பொருநையாற்றினது பாவநாசமென்கிற பெரிய துறையிலும், படிந்து - நீராடி, நதி தடம்ஏ போந்து - அந்நதியின்கரை வழியாய்ச் சென்று, பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கியம் பூமிஉம்-முற்காலத்தில் பரசுராமன் (தனது) பரசு என்னும் |