ஆயுதத்தாற் கொண்ட சிறந்தபூமியையும், சேரன் பதிகள் யாஉம்- மற்றும் சேரராசனுடைய ஊர்களெல்லாவற்றையும், கண்டு - பார்த்து, மனம் களி கூர - மனத்திற் களிப்பு மிக, சென்று -(பூமிப்பிரதக்ஷிணமாக அப்பால்) நடந்து, மேலை கடல்கண்டான் - மேற்குத்திக்கிலுள்ள கடலைப் பார்த்தான்; (எ-று.) கன்னி - குமரிதீர்த்தம்; இது, பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்ட தென்ப. மழுப்படையோன் - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன்; பரசுராமன். இவன், இருபத்தொருதலைமுறை அரசர்களைப் பொருதழித்துத் தன்வசப்படுத்திய பூமிமுழுவதையும் காசியப முனிவனுக்குத் தானஞ்செய்தபின்னர், அம்முனிவன் 'நீ எனக்குக் கொடுத்துவிட்டதான பூமியில் வசித்தல் தகுதி யன்று' என்ன, இப்பரசுராமன் 'அங்ஙனமே யாகுக' என்று கடற்கரைசேர்ந்து தனக்கு இடங்கொடுக்கும்படிஅக்கடலை வேண்டி, அதன் அனுமதிப்படி அதில் தனது கோடாலிப்படையைவீசியெறிய, அது சென்று விழுந்த பன்னிரண்டுயோசனைதூரம் கடல் விலகி விட,அப்பூமியில் அப்பெருமான் வசித்தனன்; அவ்விடம் பரசுராம க்ஷேத்திர மென்றுபெயர்பெறும்: அது, மலைநாட்டின் முக்கியமான பாகமாம். அருச்சுனன்உரகதலம்கண்டு மீண்டமை, உலூபியை மணஞ்செய்தபொழுது. (678) 48.-ஐந்துதேவமாதர்களின் சாபத்தை நீக்கிக் கோகர்ணஞ் சேர்தல். அந்தநெடுந்திசைப்புனல்களாடுநாளி லைந்துதடத்தரம்பையரோ ரைவர்சேர, இந்திரன்வெஞ்சாபத்தாலிடங்கராகி யிடருழந்தோர்பழை யவடிவெய்தநல்கிச், சிந்துதிரைநதிபலவுஞ்சென்றுதோய்ந்துதிங்களுடரை வுறவுசெய்யும்வேணிக், கொந்தவிழுமலரிதழித்தொடையோன்வைகுங்கொடிமதில்சூழ் கோகன்னங்குறுகினானோ. |
(இ-ள்.) அந்த நெடுந் திசை புனல்கள் ஆடும் நாளில் - அந்தப் பெரிய மேற்குத்திக்கிலுள்ள தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்கிற காலத்தில்,- இந்திரன் வெம் சாபத்தால் - இந்திரன்காரணமாக வந்த கொடியசாபத்தினால், ஐந்து தடத்து - ஐந்து தடாகங்களில், சேர - ஒருசேர, இடங்கர் ஆகி இடர் உழந்தோர் - முதலைகளாகித் துன்பமனுபவித்துவருகிறவர்களான, அரம்பையர் ஓர் ஐவர் - ஐந்து தேவமாதர்கள், பழைய வடிவு எய்த - (சாபத்தினாலாகிய முதலைவடிவம்நீங்கிப்) பழமையான தங்கள்நிஜவடிவத்தை யடையும்படி, நல்கி - அருள்செய்து,- சிந்து திரை நதி பலஉம் சென்றுதோய்ந்து - வீசுகிற அலைகளையுடைய நதிகள்பலவற்றிலும் போய்த் தீர்த்தமாடி,-திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி - சந்திரனுடனே பாம்பு நண்பாகஒருங்குவசிக்கப்பெற்ற சடைமுடியிலே, கொந்து அவிழும் இதழி மலர் தொடையோன்- கொத்துக்கொத்தாக மலருங் கொன்றைப்பூமாலையை யணிந்தவனான சிவபிரான்,வைகும் - வீற்றிருக்கின்ற, கொடி மதில் சூழ் கோகன்னம்- துவசங்களை நாட்டியமதில்கள் சூழ்ந்த திருக்கோகர்ணமென்ற தலத்தை, குறுகினான் - போய்ச் சேர்ந்தான்;(எ-று.) |