செயற்கையழகினால், ஒருவரும் பிறர் ஒப்பு அலர் என்னும் ஆறு உயர்ந்தார் - பிறரொருவரும் (தங்கட்கு) உவமையாகா ரென்னும்படி சிறப்புற்றார்கள்; (எ-று.) (706) 76.- கண்ணனது சங்கல்பத்தால் வசிஷ்டன் முதலிய முனிவர்கள் அங்குவந்துசேர்தல். பாலருந்ததிநறுநெய்யாய்ப் பாடியிற்கள்ளத் தாலருந்ததிவிரகன தருளினால்விரைவிற் சாலருந்ததிதலைவனுந் தலைபெறும்பலநுண் ணூலருந்ததியுறப்புகுந் தாசிகணுவன்றார். |
(இ-ள்.) ஆய்ப்பாடியில் - இடைச்சேரியில், பால் - பாலையும் அருந்ததி - அருமையான தயிரையும், நறு நெய் - நறுமணமுள்ள சிறந்த வெண்ணெயையும் நெய்யையும், கள்ளத்தால் அருந்து - களவினா லெடுத்து உண்ட, அதிவிரகனது - மிக்கதந்திரமுடையவனான கண்ணபிரானது, அருளினால்-, சால் அருந்ததி தலைவன்உம் - (கற்பினால்) நிறைந்த அருந்ததியின் கணவனான வசிஷ்டனும், தலைபெறும் பலநுண் நூலர்உம் - தலைமைபெற்ற பல நுட்பமான நூல்களை யுணர்ந்த முனிவர்களும்,விரைவில் - விரைவாக, ததி உற புகுந்து - கூட்டமாக வந்து, ஆசிகள் நுவன்றார் -ஆசீர்வாதங்களைச் சொன்னார்கள்; (எ-று.) ததி - தயிர்: தற்பவமான வடசொல். ததி - வரிசை: தற்சம வடசொல். இச்செய்யுளில் 'திரிபு' என்னும் சொல்லணி காண்க. (707) 77.- சுபத்ராகல்யாணம், தொடங்கிநாதவெம்முரசுடன் சுரிமுகந்தழங்கச் சடங்கினாலுயராகுதித் தழலவன் சான்றா விடங்கினான்மிகுவிசயனக் கன்னியைவேட்டான் மடங்கினார்தமபதிதொறு மவ்வுழிவந்தார். |
(இ-ள்.) நாதம் வெம் முரசுடன் - ஓசையையுடைய விரும்பப்படும் முரசவாத்தியங்களோடு, சுரி முகம் - சங்கவாத்தியங்கள், தழங்க - ஒலிக்க, சடங்கினால்உயர் ஆகுதி தழலவன் சான்று ஆ - வைதிகச் சடங்கினாற் சிறந்த ஆகுதியையுடைய அக்கினி தேவன் சாக்ஷியாக, விடங்கினால் மிகு விசயன் அ கன்னியைதொடங்கி வேட்டான் - அழகினால் மிக்க அருச்சுனன் அச்சுபத்திரையை முயன்றுமணஞ்செய்தான்; (பின்பு), அ உழி வந்தார் தம பதிதொறும் மடங்கினார் - அவ்விடத்தில் வந்த இந்திரன் முதலியோர் தம்தம் இருப்பிடங்கட்கு மீண்டு சென்றார்கள்; (எ-று.) மணமுரசு என்றதற்கு, 'வெம்முரசு' என்றார்; 'வெம்மை வேண்டல்'. சுரிமுகம் - சுழிந்தமுகமுடைய தெனப் பொருள்படும் காரணக்குறி; விணைத்தொகையன்மொழி. சடங்கினாலுயர் ஆகுதித் தழலவன் - ஓமாக்கினி. (708) 78.- மணவினை முடித்தபின்பு கண்ணன் அருச்சுனனை நகையாடுதல். முன்னம் யாவையு முடித்தருண் மொய்துழாய் முடியோன் கன்ன னாருயிர் கொளவளர் காளையைத் தழீஇக்கொண்டு |
|