அன்ன மென்னடை யரிவையர் பொருட்டுநீ யின்னம் என்ன வென்னமா தவவுருக் கொள்ளுதி யென்றான். |
(இ-ள்.) முன்னம் யாவைஉம் முடித்தருள் - முன்நின்று (இவ்விவாகத்துக்கு உரியவை) எல்லாவற்றையும் நிறைவேற்றி யருளிய, மெய் துழாய் முடியோன் - நெருங்கிய திருத்துழாய்மாலையை யணிந்த திருமுடியையுடையவனான கண்ணன், கன்னன் ஆர் உயிர் கொள வளர்காளையை தழீஇக்கொண்டு - கர்ணனுடைய அருமையான உயிரைக் கவர வளர்கிற இளவீரனான அருச்சுனனைத் தழுவிக்கொண்டு, 'நீ-, அன்னம் மெல் நடை அரிவையர் பொருட்டு - அன்னப்பறையினது மந்தகதிபோன்ற மென்மையான நடையையுடைய மகளிரைத் தழுவுதற்காக, இன்னம் என்ன என்ன மாதவம் உரு கொள்ளுதி- இன்னமும் என்னஎன்ன பெரிய தவவேடத்தைக்கொள்வாயே?' என்றான் - என்று நகையாடிச் சொன்னான்; (எ -று.) காரியத்தைமுடித்தபின்புஉண்டான களிப்பினாலும், மைத்துனமையினாலும், இங்ஙனம் தகுதியாகப் பரிகசித்தன னென்க. முன்னம் - எண்ணமுமாம். (709) 79. -கண்ணன்கட்டளையால் சுபத்திரை தேர்செலுத்த, அருச்சுனன் துவாரகாபுரியினின்று இந்திரப்பிரத்தநகர் நோக்கிச் செல்லுதல். காமற் பயந்தோன் றனதேவலிற் காம பாலன் வாமம் பதிதன் னினும்வாசவ மாபி ரத்த நாமப் பதியே திசையாக நடக்க லுற்றான் தாமக் குழலா டனித்தேர்விடச் சாப வீரன். |
(இ-ள்.) காமன் பயந்தோன் தனதுஏவலின் - மன்மதனைப் பெற்றவனான கண்ணபிரானது கட்டளையினால், சாபம் வீரன் - வில்வீரனான அருச்சுனன்,- தாமம்குழலாள் தனி தேர் விட - மாலையை யணிந்த கூந்தலை யுடையவளான சுபத்திரைஒப்பற்ற தேரைச் செலுத்த, காமபாலன் வாமம் பதி தன்னின்உம் - பலராமனுடையஅழகிய துவாரகாபுரியினின்றும், மா வாசவ பிரத்தம் நாமம் பதிஏ திசை ஆக நடக்கல்உற்றான் - பெரிய இந்திரப்பிரத்த மென்னும் பெயரையுடைய நகரமே (தான்)நோக்கிச்செல்லுந்திசையாகச் செல்பவனானான்; (எ-று.) பலராமன் கண்ணனுக்குத் தமையனாதலாலும் கண்ணன் அவன் கீழ் அடங்கியொழுகியதனாலும், துவாரகை 'பலராமனுடைய ஊர்' எனப்பட்டது. காமபாலன்என்ற வடமொழிப்பெயர் - காமத்தை [அடியார்களுடைய விருப்பத்தை]க்காப்பவனென்று பொருள்படும்.(ராஜஸ்திரீகள்சிலர் தேர்செலுத்த வல்லராதலை,சம்பராசுரனோடு பொருகையில் தசரதசக்கவர்த்திக்குக் கைகேயி தேர்செலுத்தினளென்றவரலாற்றினாலும் அறிக). மன்மதன் திருமாலின்மகனாதலும், மன்மதாம்சமானபிரத்யும்நன் கண்ணன் மகனாதலும் பற்றி, கண்ணனுக்கு 'காமற் பயந்தோன்' என ஒருபெயர் கூறினார். |