கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பலதிருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த நந்தகோபர் மனைவியான யசோதை ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓர் உரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய் நின்றுஇழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்த வளவில், முன்புநாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங்குபேரபுத்திரரிரு வரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பதாம். இந்தக் குபேரபுத்திரர்கள்முன்பு ஒருகாலத்திற் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஒரு நீர்நிலையிலே ஜலக் கிரீடை செய்துகொண்டிருக்கையில் நாரதமகாமுனிவர் அங்கு எழுந்தருள,அதுகண்டு மங்கைய ரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்துநீங்க, இந்தமைந்தர்மாத்திரம் மதுபாநமயக்கத்தால் நிர்வாணமாகவே யிருக்க, நாரதர் கண்டுகோபங்கொண்டு 'மரங்கள்போ லிருக்கிற நீங்கள் மரங்களாவீர்' என்று சபித்து உடனேஅவர்கள் வேண்டியதற்கு இரங்கி 'நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால்உங்களையடையுஞ் சமயத்தில் இவ்வடிவம் ஒழிந்து முன்னையவடிவம் பெற்று மீள்வீர்' என்று சாபவிடை கூறிப்போயின ரென அறிக. (720) 90.- ஒருகால் இளவேனிற்பருவத்தின் வரவு. உரனா லழகா லுரையான்மற் றுவமை யில்லா நரநா ரணர்க்கு நலங்கூர்தரு நண்பு போல்வான் அரனார் விழியா லழிந்தங்க மநங்க மான மரனா ருடனண் பிசைந்தன்று வசந்த காலம். |
(இ-ள்.) உரனால் - வலிமையினாலும், அழகால் - அழகினாலும், உரையால் -சொல்லினாலும், மற்று உவமை இல்லா - (தமக்குத் தாமேயன்றி)வேறுஉவமை பெறாத,நர நாரணர்க்கு - அருச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்கு முள்ள, நலம் கூர்தரு நண்பு -நன்மைமிக்க சிநேகத்தை, போல்வான் - ஒக்கும் பொருட்டு, வசந்தகாலம் -இளவேனிற்பருவமானது, அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆனமரனாருடன் - சிவபிரானுடைய நெற்றிக்கண்ணால் வெந்து உடம்பு அருவமான மன்மதனுடனே, நண்பு-, இசைந்தன்று - கூடிவந்தது; (எ-று.) மன்மதனது முயற்சியாலாகுந் தொழிலாகிற சிற்றின்பவிளையாட்டுக்கள் வசந்தகாலத்தில் மிகுதலால், அவன், அக்காலத்துக்கு நண்ப னெனப்படுவன்; மன்மதனுக்கு 'வேனிலான்' என்று ஒரு பெயர் வழங்குதலும் காண்க. இங்ஙனம் காமோத்தீபகமான வசந்தகாலம் இயல்பாகக் காமனோடு கூடிவருதலை, கிருஷ்ணார்ச்சுனர்களுக்கு உள்ள சிநேகத்தை யொக்கும்பொருட்டுக் கூடிவந்த தென்றது, தற்குறிப்பேற்றவணி. மரன் - மாரன் என்பதன் குறுக்கல். அருச்சுனன் றீர்த்தயாத்திரைச் சருக்கம் முற்றிற்று. ------- |