அருச்சுனன் சிவிறியால் நீரைத்தூவ அது தன்முகத்தில் நேரே விழும்போது அவனைக் காணவெட்டாமற் செய்வதால், ஒருத்தி அந்நீர்வீழ்ச்சிக்கு அஞ்சித் தன்முகத்தைத் தன்கையால் மூடியவண்ணம் விரற்சந்தினால் அவ்வருச்சுனனழகைப் பார்க்க லாயின ளென்பதாம். மருங்கசைதலும் தனபாரம் புளகமேறுதலும் நீர்வீழ்ச்சியினா லாயினவை. (729) 9. | நங்கையங்கோர்கொடியனையாள்வதனமதி சலமதியாய் நடுங்குமாறு, பங்குனன்றன்றிருச்செங்கைப்பங்கயத்தின் சிவிறியினாற் பரிவுகூரக், குங்குமங்கொள்புனல்விடவுமிமையாமற் புனல்வழியே கூர்ந்தபார்வை, செங்கலங்கற்புதுப்புனலுக்கெதிரோடி விளையாடுஞ் சேல்கள்போலும். |
(இ-ள்.) அங்கு அவ்விடத்தில் [அப்பொழுது], கொடி அனையாள் - பூங்கொடிபோன்றவளான, ஓர் நங்கை - ஒரு சிறந்தமகளினது, வதனம் மதி - முகமாகிய சந்திரன், சலம் மதி ஆய் - நீரினுள்ளே தோன்றுஞ் சந்திரபிம்பத்தைப் போன்று, நடுங்கும் ஆறு - மிக அசையும்படி, பங்குனன் - அருச்சுனன், தன் திரு செம்கை பங்கயத்தின் சிவிறியினால் - தனது அழகிய சிவந்த தாமரை மலர்போன்ற கையிலுள்ள நீர்த்துருத்தியைக்கொண்டு, பரிவுகூர- (அவட்கு) வருத்தம்மிகும்படி, குங்குமம் கொள் புனல் விடஉம் - குங்குமத்தைக் கரைத்த நீரை விசையோடு மேல்வீசவும், இமையாமல் - இமைகொட்டாமல், புனல் வழிஏ கூர்ந்த - நீரினிடையேநுண்ணிதாய்ப்பார்த்த, பார்வை - (அவளுடைய) கண்கள், செம் கலங்கல் புதுபுனலுக்கு எதிர்ஓடி விளையாடும் சேல்கள் போலும் - சிவந்த கலக்கமுள்ள புதியநீர்வெள்ளத்துக்கு எதிரே ஓடிவந்து விளையாடுகிற சேல் மீன்களை ஒக்கும்; (எ-று.) அருச்சுனன் ஓர் மெல்லியலாளின் முகத்தின்மேல் துருத்தி கொண்டு விசையாகக்குங்குமங் கலந்த நீரைத் தூவினான்; அதைப் பொறுக்கமாட்டாமல் அவள் முகத்தைமிகுதியாக அசைக்கலானாள்; அச்சமயத்தில், சந்திர மண்டலம் போன்ற அவளுடையமுகமண்டலம் நீரினுள்ளே நடுங்கியது, நீரினுள்ளே காணப்படுகிற சந்திரமண்டலத்தினதுபிரதிபிம்பம் அந்நீரின் அசைவினால் அசைந்து தோன்றுவதைப் போன்றது; இங்ஙனம்தனக்கு வருத்தம் மிகுமாறு அருச்சுனன் மேல்மேல் நீர்வீசிக்கொண்டிருக்கவும் அவள்அவன்பக்கலுள்ள ஆசையாற்கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடியே யிருந்தாள்;அவ்வாறுநீரிற்கு எதிராக நுட்பமாய்ப் பார்வையைச் செலுத்துகிற அவளுடையகண்கள்,செங்கலங்கற் புதுவெள்ளத்திற்கு எதிரோடி விளையாடுஞ் சேல்மீன்கள் போன்றனஎன்பதாம்; தற்குறிப்பேற்றவணி. பரிவு கூர என்பதற்கு - ஆசைமிக என்று பொருள்கொள்ளினும் அமையும்; அருச்சுனன் தனக்கு அவளிடம் ஆசைமிகுதலால்அவள்மேற் புனல்வீசின னென்றும், தனது காதலனான அவன் கைச்சிவிறிகொண்டுவீசியநீர் தன் உடலிற்பட்டபோது அவள் அவன்கையால் தீண்டினாற் போலஇன்பமிக்கனளென்றும் கொள்க. (730) |