பிறப்பை யுடையவன்; தாய்வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச்சன்மதத்தோடு பின்பு உபநயநச் சடங்கினால்வருகிற ஞானசன்மமும் ஒரு பிறப்பா மென்பது நூற்கொள்கையாதலால் இருபிறப்பினன் என்று பெயர். ஹு தாஸநன் என்ற பெயர்= ஹு தஅஸந என்று பிரிந்து, (தன்பக்கல்) ஹோமஞ் செய்யப்பட்டபொருளை உணவாகக்கொள்பவனென்று பொருள்படும். (744) 24.- அவ்வனத்தின் தன்மை. மிடைந்தநால்வகைமகீருகங்களுநெடுவெற் பினங்களுந்துன்றி அடைந்ததானவரரக்கர்பேருரகருக் காலயங்களுமாகிக் குடைந்துசோரிகொள்வாளுகிரரிமுதற் கொடுவிலங்கினமிக்குக் கடைந்தகூரெயிற்றாலதக்ககனும்வாழ் கானனமதுகண்டீர். |
(இ-ள்.) அது - அக்காண்டவமென்பது,- மிடைந்த - நெருங்கிய, நால்வகை மகீருங்கள்உம் - நான்குவகைப்பட்ட விருட்சவரக்கங்களும், நெடு வெற்பு இனங்கள்உம் - பெரியமலைக் கூட்டங்களும், துன்றி - நிறைந்து, அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்கள்உம் ஆகி - (தன்னிடத்தில்வந்து) சேர்ந்த அசுரர்கள் இராக்கதர்கள் பெரிய நாகர்கள் என்னும் இவர்களுக்கு இருப்பிடங்களும் அமையப்பெற்று, குடைந்து சோரி கொள் - அகழ்ந்து இரத்தத்தைக் கொள்ளுகிற, வாள் உகிர் - வாட்படைபோலக் கூரிய நகங்களையுடைய, அரி முதல் கொடு விலங்குஇனம் - சிங்கங்கள் முதலான கொடிய மிருகசாதிகள், மிக்கு - மிகுந்து, கடைந்த கூர்எயிறு ஆலம் தக்ககன்உம் வாழ் - கடைந்தாற்போன்ற கூரிய பற்களில் விஷத்தையுடைய தக்ஷக னென்னும் மகாநாகமும் வசிக்கிற. கானனம் - காடாகும்; கண்டீர் -அறிவீரன்றோ? (எ-று.) கண்டீர்என்ற முன்னிலைப்பன்மை முற்று, இடைச்சொல் தன்மைப் பட்டு, முன்னிலையசையாகியும் தேற்றப்பொருள்தந்தும் நிற்கும். நால்வகை மகீருகங்கள் - மரம், கொடி, செடி, புல் என்பன; வித்து வேர் கிழங்கு கொடிகளில்தோன்றுவன என்பாரு முளர்; மற்றுஞ் சிலவகையாகவும் உரைக்கலாம். மஹீருஹம் - மஹீ - பூமியில், ருஹம் - முளைப்பது. தக்ஷகன் - அஷ்டமகாநாகங்களுள் ஒன்று;(அவையாவன - அநந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ஷகன், பதுமன், மகாபதுமன், வாசுகிஎன்பன.) சொரிவது சோரி எனக் காரணக்குறி. (745) 25.- இந்திரன்செய்யும் இடையூற்றுக்கு இடையூறுசெய்ய வேண்டுமென்று அக்கினிதேவன் தன்வேண்டுகோளைத் தெரிவித்தல். புகுந்தியான்முகம்வைக்கினேழ்புயலையு மேவியப்புருகூதன் தொகுந்தராதலவிறுதிபோனெடும்புனல் சொரிந்தவித்திடுமென்னை முகுந்தனானிரைபுரந்தவாறெனவொரு முனைபடவிலக்கிற்பின் மிகுந்தாகமுமெண்ணமுமுடிந்திடும் வேண்டுவதிதுவென்றான். |
(இ-ள்.) யான் புகுந்து முகம் வைக்கின் - நான் பிரவேசித்து (அவ்வனத்தை உண்ண) வாய்வைத்தால், அ புருகூதன் - அவ்வனத்தைக் காவல்செய்பவனான இந்திரன், ஏழ் புயலைஉம் ஏவி-. |