என்றார். செம் - செம்மையென்னும் பண்பினடி. மரகதம், நீலம் - அவற்றின் நிறத்துக்கு,இலக்கணை. (753) 33.- இதுமுதல் மூன்று கவிகள் - அக்கினிச்சுவாலையின் வருணனை. கருதியாயிரகோடிவெம்புயங்கமிக் கானிடையுளவென்று பரிதிசூழ்வர வெருவுபல்குவடுடைப் பருப்பதங்களின்சாரல் சுருதிவேள்விநூலுடையவன்சிறகறத் துணித்தவாய்தொறும்பொங்[கிக் குருதிபாய்வனபோன்றனகொளுந்திய கொழுந்தழற்கொழுந்தம்மா. |
(இ-ள்.) பரிதி - சூரியன், ஆயிரம் கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று கருதி - ஆயிரகோடி கொடியபாம்புகள் இந்தக்காட்டிலுள்ளன என்று எண்ணி, சூழ்வர வெருவு - பிரதக்ஷிணமாகச்செல்வதற்கு அஞ்சும்படியான, பல் குவடு உடை பருப்பதங்களின் சாரல் - பல சிகரங்களையுடைய மலைகளின் சாரல்களில், கொளுந்திய - பற்றிய, கொழுந் தழல் கொழுந்து - கொழுமையான அக்கினிச்சுவாலைகள்,- கருதி வேள்வி நுறு உடையவன் - வேத விதிப்படி செய்யப்பட்ட நூறு (அசுவமேத) யாகங்களை யுடையவனான இந்திரன், சிறகு அற துணித்த - (அம்மலைகளின்) இறகுகள் அறும்படி வெட்டிய, வாய்தொறுஉம் - இடங்களிலெல்லாம், பொங்கி பாய்வன - மேன்மேற்கிளர்ந்து பாய்வனவான, குருதி - இரத்தப்பெருக்குக்களை, போன்றன - ஒத்தன; (எ-று.) காண்டவவனத்துப் பருப்பதச்சாரல்களிற் பற்றியெரியும் அக்கினிச் சுவாலைகள் இந்திரன் மலைச்சிறகுகளை வெட்டிவீழ்த்தின வாய்களினின்று பெருகும் இரத்தம்போலுமெனக் குறித்தனர், தற்குறிப்பேற்றவணி. இராகு கேதுவென்னும் பாம்புகள் தனக்குப் பகையாதல்பற்றிக் கொடியபாம்புகட்கெல்லாஞ்சூரியன் அஞ்சினன்.நூறு அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால், 'வேள்விநூறுடையவன் 'என்றார். அம்மா - ஈற்றசை; வியப்புமாம். (754) 34. | கோத்திரங்களின்கவானிடைக்கதுமெனக் கொளுந்தியுற் றெரிகின்ற, தீத்திறங்கள்செங்காந்தளுமசோகமுஞ் செங்குறிஞ்சியுஞ் சேரப், பூத்தவொத்தனவன்றியுங்குலிகநீர் பொழியருவியும்போன்ற, பார்த்தகண்கள் விட்டேகலாவகைநிறம்பரந்ததாதுவும் போன்ற. |
(இ-ள்.) கோத்திரங்களின் கவானிடை - மலைகளின் இடைப்பகுதிகளிலே, கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற - விரைவாகப்பற்றி மிகுந்து எரிகிற, தீ திறங்கள் -அக்கினிச்சுவாலைகளின் பகுதிகள்,- செம்காந்தள்உம் அசோகம்உம் செங் குறிஞ்சிஉம் சேரபூத்த ஒத்தன - செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் ஒருங்குபூத்தனவற்றை யொத்தன;அன்றிஉம் - இதுவல்லாமலும், குலிகம் நீர்பொழி அருவிஉம் போன்ற -இங்குலிகம்கலந்த நீரைச் சொரிகிற மலையருவியையும் ஒத்தன; பார்த்த கண்கள் விட்டுஏகலாவகை - (தன்னைப்) பார்த்தகண்கள் (தன்னை விட்டு) (வேறொன்றினிடத்தே)சொல்லாதபடி நிறம் பரந்த - செந்நிறம் பரந்த, தாதுஉம் - காவிக்கல்லையும், போன்ற- ஒத்தன; (எ-று.) |