முழைந்தவான்புழையொருகரத்திருபணை மும்மதப்பெருநால்வாய் மழைத்தகுஞ்சரமுகந்தொறும்புக்குடன் மயங்கியபொறிமாலை. |
(இ-ள்.) முழைத்த - மலைக்குகையின் தன்மையைக்கொண்ட, வான்புழை- பெரியதுளையையுடைய, ஒரு கரத்து - ஒரு துதிக்கையையும், இருபணை - இரண்டு தந்தங்களையும், மும் மதம் - மூன்று வகை மதஜலத்தையும், பெரு நால் வாய் - பெரிய தொங்குகிற வாயையு முடைய, மழைத்த குஞ்சரம் - மேகத்தின் தன்மையுள்ளயானைகளின், முகம் தொறும் - முகங்களிலெல்லாம், புக்கு - போய்ச் சேர்ந்து, உடன்மயங்கிய - உடனே (அவற்றிற்) பற்றியெரிவனவான, பொறி மாலை - தீப்பொறிகளின்வரிசைகளானவை,- அ அடவிக் கண் - அந்தக் காண்டவவனத்திலே, பிழைத்த -(தமக்கு) அஞ்சித் தப்பிச்சென்று ஒளித்துவாழ்ந்த, கார் இருள் பிழம்பினை - கரியஇருட்டொகுதிகளை, போய் தடவி வளைந்து உடன்பிடித்து எரிப்பன - விடாதுபின்சென்று தடவிச்சூழ்ந்து உடனேபிடித்து எரிப்பனவான, தழைத்த பேர் ஒளிதிவாகரன் கரங்கள் - நிறைந்த சிறந்த ஒளியையுடைய சூரியனதுகிரணங்களை, போலும்- ஒக்கும்; (எ-று.) குஞ்சர முகந்தொறும் புக்குமயங்கிய பொறிமாலை திவாகரன் கரங்கள் காரிருட்பிழம்பினைத் தடவி வளைந்தெரிப்பனபோலுமென்றார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இருட்பிழம்பு - யானைக்கும், சூரியகிரணம் - அனற்பொறி நிரைக்கும் உவமை. பகைவர்க்கு அஞ்சினவர் காட்டிற்புக்கு ஒளித்த லியல்பாதலால், 'அடவிக்கட் பிழைத்த காரிருட்பிழம்பு' எனப்பட்டது. கைகளென்றும் ஒரு பொருள் தோன்ற 'கரங்கள்' என்றதற்கு ஏற்க 'தடவி' என்றார்; கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருட்டில் ஒளிந்துள்ள பொருளைத் தேடுவோர் கைகளைநீட்டி அவற்றால் தடவிப்பிடிக்கும் இயல்பு இங்குக் குறிக்கப்பட்டது. மூன்றாமடியில் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்ற தொகைச்சொற்கள் முறையே அமையவைக்கப்பட்டது, ஓர் அழகாம்; இது, ரத்நாவளியலங்காரமெனப்படும். (757) 37.- அவ்வனத்திலுள்ள பலவகைப்பிராணிகள் பலவாறு எரிபட்டு அழிதலை இதுமுதல் ஏழுகவிகளிற் கூறுகின்றார். அரியெனும்பெயர்பொறாமையிற்போல்விரைந்தழற்கொழுந்துளைபற் கிரிமுழைஞ்சுகடொறும்பதைத்தோடின கேசரிக்குலமெல்லாம் [றக் விரியுரோமவாலதிகளிற்பற்றலின் விழைவுடைச்சவரங்கள் எரிகொள்சோகவெங்கனலினானின்றுநின் றிறந்தனசலியாமல். |
(இ-ள்.) அழல் கொழுந்து - அக்கினிச்சுவாலையானது, அரி எனும் பெயர் பொறாமையின் போல் - (தனக்குஉள்ள) அரியென்னும்பெயர் (சிங்கத்துக்கும்) இருத்தலைப் பொறாததனாற் போல, விரைந்து உளை பற்ற - விரைவாக (அச்சிங்கங்களின்) பிடரிமயிரிற் பற்றிக்கொள்ள,- (அதனால்), கேசரி குலம் எல்லாம் -சிங்கக்கூட்டங்கள்யாவும், பதைத்து - துடிப்புற்று, கிரி முழைஞ்சுகள் தொறு உம் ஓடின- மலைக்குகைகளிலெல்லாம் ஓடிச்சென்றன; விழைவு உடை சவரங்கள் - (வாலின்மயிரில்) விருப்பத்தையுடைய கவரிமான்கள்,- விரி உரோமம் வாலதிகளில் பற்றலின் -மிக்கு |