யான்முன்னே யென்று மிக்க உற்சாகத்தோடு ஒருவரினும் ஒருவர் முற்பட்டு விரைந்துபோர்க்குவருதல் சிறந்தவீரரது இயல்பாதலால்' முந்துற வந்து வந்து அணிந்தார் 'என்றார். (785) 65.- துவாதசாதித்தர் தோற்றோடுதல். பச்சைவாசிகளுஞ்செய்யனவாகப் பாகரும்பதங்களேயன்றித் தச்சவாளிகளாற்கரங்களுமிழந்து தனிப்பெருந்திகிரியுந்தகர உச்சமாமகத்திற்பண்டொடிந்தொடியா தொழிந்தனபற்களுமொடிய அச்சமேதுணையாவருக்கனுமொழிந்தவருக்கர்பன்னொருவருமகன்றார். |
(இ-ள்.) பச்சை வாசிகள்உம் செய்யன ஆக - (தங்கள் தேரிற்பூட்டிய) பச்சைநிறக்குதிரைகளும் (அம்புபட்டு இரத்தங்குழம்பியதனாற்) செந்நிறமுடையனவாகவும் பாகர்உம்-(தங்கள்) தேர்ப்பாகர்களான அருணர்களும், பதங்கள்ஏ அன்றி - (இயல்பாகக்) கால்களின்றி யிருத்தல் மாத்திரமேயன்றி, தச்ச வாளிகளால் கரங்கள்உம் இழந்து - தைத்த அம்புகளினாற் கைகளையும் இழக்கவும், பெருதனி திகிரிஉம் தகர-பெரிய ஒற்றைச்சக்கரங்களும் உடையவும், பண்டு உச்சம் மாமகத்தில் ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்கள்உம் ஒடிய-முன்பு உயர்ந்த பெரிய (தக்ஷமுனிவனது) யாகத்தில் ஒடிந்தவை போக ஒடியாது மிச்சப்பட்ட பற்களும் ஒடியவும், அருக்கன்உம்-(பூஷா என்னுஞ்) சூரியனும், ஒழிந்தஅருக்கர் பன்னொருவரும்- மற்றைச் சூரியர் பதினொரு பேரும், அச்சம்ஏ துணை ஆ அகன்றார்-பயமே(தமக்குத்) துணையாக அமைய ஓடிப்போனார்கள்; (எ-று.) துவாதசாதித்தியராவார் - இந்திரன், தாதா, பர்ஜந்யன், த்வஷ்டா, பூஷா, அரியமா, பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் என்னும் பெயரினர். இவர்களில் பூஷாவென்னும் சூரியன் தஷமுனிவன் செய்த யாகத்தில் வீரபத்திரக் கடவுளாற் பல்லொடிந்தமை பற்றி, அவனைத் தனியே யெடுத்துக்கூறி, மற்றையோரை 'ஒழிந்தபன்னொருவர்' என்றார். தனது திருமகளாய்த்திருவவதரித்த அம்பிகையைப் பரமசிவனுக்குத்திருமணஞ்செய்து கொடுத்த தக்ஷப்பிரஜாபதி, மாமனாகிய தனக்குத் தக்க மரியாதை செய்தில னென்ற காரணத்தாலும் மற்றுஞ் சிலகாரணங்களாலும் சிவபிரான்மேற் சினங்கொண்டு அவ்வுமாமகேசுரர்களை வரவழையாது அவிர்ப்பாகமுங் கொடாமல் அவமதித்து மற்றைத்தேவர்முனிவராதியோருடனே பெரியதொருயாகத்தைச் செய்யாநிற்கையில், தாக்ஷாயணி தனது தாய்தந்தையரையும் தங்கை தமக்கை முதலிய சுற்றத்தாரையும் ஒருங்கு கண்டு கூடிக் குலாவலாமென்னுங் கொள்கையால் தான் மாத்திரம் அவ்வேள்விக்குச் சென்று அங்கு அம்முனிவன் தன்னை அலட்சியஞ்செய்து தன்பதியையும் பழித்ததனால் அக்கினிபிரவேசஞ்செய்து தஷபுத்திரியான உருவத்தை யொழிக்க, அதுகேட்டுச்சுடுசினங்கொண்ட உருத்திரமூர்த்தி தனது சடையைக் கீழேயடித்து அதனினின்று தோன்றிய வீரபத்திரக்கடவுளை நோக்கி 'நீசென்றுதக்கன்வேள்வியை அழித்து வருக' என்று கட்டளையிட, அவ்வீரன், அம்பிகை |