என்றவிடத்து 'ஏறு' - படைக்கலத்தழும்பு: வாளேறு, வில்லேறு என வருதலுங்காண்க. (787) 67.- வசுக்களும் அசுவிநீதேவரும் தோற்றோடுதல். எண்ணியவசுக்களெண்மரிற்கங்கை யென்னும்யாய்வயிற்றினுற் பவித்த, புண்ணியனொழிந்தோரெழுவருந்தங்கள் புயவலிமையிற் பொருதிடுவார், நண்ணியவமரின் விசயன்வெங்கணையா னாப்புலர்ந் துள்ளமுநடுங்கி, அண்ணியநிலயம்புகுந்தனரென்றா னிற்பரோவாயுள்வேதியரே. |
(இ-ள்.) எண்ணிய வசுக்கள் எண்மரில் - எண்ணித்தொகையிடப்பெற்ற வசுக்களெட்டுப்பேரில், கங்கை என்னும் யாய் வயிற்றின் உற்பவித்த புண்ணியன் ஒழிந்தோர்எழுவர்உம் - கங்கையென்னுந் தாயின் வயிற்றில் (வீடுமனாய்த்) தோன்றியுள்ளநல்வினையுடையோனான பிரபாசனென்பவ னொழிந்தவரான ஏழுபேரும்,- தங்கள் புயம் வலிமையினாற் போர்செய்திடுபவர்களாகி, நண்ணியஅமரின்-நேர்ந்தயுத்தத்தில், விசயன் வெம் கணையால் - அருச்சுனனது கொடிய அம்புகளினால், நாபுலர்ந்து - நா ஈரம்வறளப்பெற்று, உள்ளஉம் நடுங்கி - மனமும் நடுங்கி, அண்ணியநிலயம் புகுந்தனர் - (தாம்) தங்கியுள்ள இடத்துக்குப் போய்ச்சேர்ந்தார்கள், என்றால்-என்று சொன்னால், ஆயுள்வேதியர் நிற்பர்ஓ-தேவ வைத்தியர்களானஅசுவிநீதேவர்கள் (ஓடாது) நிற்கமாட்டுவரோ? (மாட்டார்; ஓடின ரென்றபடி); (எ- று.) புயவலிமையாற் பொருதிடுபவரான வசுக்களேபுறங்கொடுத்து ஓடின ரென்றால், வைத்தியஞ்செய்தலையே தம்தொழிலாகவுடையவரான அசுவிநீதேவர்கள் அருச்சுனன்முன் போருக்கு நிற்கமாட்டுவரோ? என்பதாம்.இங்ஙனம் ஒருபொருளைச்சொல்லி அதுகொண்டு கைமுதிகநியாய மென்னும் தண்டாபூபிகாநியாயத்தால் மற்றொரு பொருளைச் சாதிப்பது - தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. தலைமைத்தேவர்களில் ஆதித்தர் பன்னிருவரும் உருத்திராபதினொருவரும் வசுக்களெழுவரு மாகிய முப்பதுபேர் போரிற்பல் முதலிய சிதைய அடிபட்டுத் தம் வீடுசேர்ந்தன ரென்றால், தேவர்கட்குவைத்தியஞ்செய்தற்கே யமைந்தவர்களான அசுவிநீ தேவரிருவர் அவ்வாதித்தர் முதலியோர்க்கு நோய்தீர்க்குமாறுவைத் தியஞ்செய்தற்குச் செல்லக்கடவரே யன்றிப் போரில் நிற்கக்கடவரோ? என்ற பொருளும் இதில் தோன்றும். (788) 68. - திக்பாலகர்கள் போர்செய்ய மாட்டாமை. அருணவெங்கனலோன்கனலொடுகலந்தா னாசுகனவற்குநண் பானான், கருணையில்யமனுங்கானிடைமடியுங் கணத்திலேகவலையுற்ற னனால், வருணனுங்கடல்கள்வறத்தல்கண்டழிந்தான் மதியுமம்மதி முடித்தவனும், இருணிறவரக்கிதானுமிங்கிவரோ டெங்ஙனம்பொருது மென்றிளைத்தார். |
(இ - ள்.) அருணம் வெம் கனலோன் -செந்நிறத்தையுடைய வெவ்விய அக்கினிதேவன், கனலொடு கலந்தான்-(அவ்வனத்தை |