பொழிய - தேவர்களைத் துரத்தியவனான அருச்சுனன் கையிற் கொண்ட (காண்டீவ) வில்லைக்கொண்டு (அம்பு) மழை சொரிதலால், கற்கள்உம் துகள் ஆய் - (தம்மிடத்துஉள்ள) கற்களும், பொடியாகப் பெற்று, மேனிஉம் வெளிறி - உடம்பும்வெளுத்து, மீண்டது - திரும்பிச்சென்றது; (எ - று.) - ஏ - ஈற்றசை. உவமையணி. சொல்மழை பொழிதல் - நற்பொருள்விளைக்கும் இனிய சொற்களைத் தட்டுத்தடையின்றி உபயோகித்தல். நாவலர் - கவிபாடுதலும் உரைகூறுதலும் பிரசங்கஞ் செய்தலுமாகிய நாவின்வன்மையையுடையவர். பொன்மழைபொழிதல் - எதிருதவியை யெதிர்பாராமற் புலவர்கட்குப் பொன்னைமிகுதியாகத்தருதல். கடுமையாகப் போர்செய்து வந்த வரபதியாட்கொண்டானது பகைவர்கள் தம்மிடத்து உள்ள ஆயுதம்முதலிய பொருள்கள்உதவாது ஒழிய அச்சத்தால் உடல்வெளுத்து மீண்டுசெல்லுதல்போல, கன்மழைபொழியுங் காளமேகங்கள் கற்கள்துகளாய்த் தம்மிடத்து உள்ள நீர் ஒழிந்ததனால் வெண்ணிறம்பெற்று விலகின என்க; உடல் வெளுத்தல் - அச்சக்குறி. மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்றவற்றைப் பொழிகிற சம்வர்த்தம் முதலிய ஏழனுள் காளமுகி யென்பதே 'கன்மழை பொழியுங்காளமாமுகில்' என்று இங்குக் குறிக்கப்பட்டதாதலின், 'மீண்டதுவே' என்று ஒருமைமுடிபு கொடுத்தார். பாகையுந்தனதுசூரமுந் துதிக்குநாவலர்க்கு என்றும் பாடம். (790) 70.- அருச்சுனன் இந்திரனை யெதிர்த்து உக்கிரமாகப் போர்தொடங்குகையில் ஆகாயவாணி யெழுதல். மாயவன்றனக்குநேயமைத்துனனா மைந்தனத்தந்தையைமதியான் தூயவெங்கணையாலவனிடித்துவசந்துணித்தமர்தொடங்குமவ்வளவில் காயமெங்கணுநின்றொலியெழப்பரந்து காயமில்கடவுளக்கடவுள் நாயகன்றனக்குப்பரிவுடனவைதீர் நல்லுரைநவின்றதையன்றே. |
(இ-ள்.) மாயவன் தனக்கு - கண்ணபிரானுக்கு, நேயம் மைத்துனன் ஆம் - அன்புள்ள மைத்துனனாகிய, மைந்தன் - (இந்திர) குமாரனான அருச்சுனன், அ தந்தையைமதியான்-(தனது) பிதாவாகிய அவ்விந்திரனை லக்ஷ்யஞ்செய்யாதவனாய், தூய வெம்கணையால் - சுத்தமான கொடிய அம்பினால், அவன் இடி துவசம் துணிந்து- அவ்விந்திரனுடைய இடியின் வடிவமெழுதிய கொடியைத் துண்டித்து, அமர்தொடங்கும் அ அளவில் - (மேலும்) போர்தொடங்குகிற அச்சமயத்திலே,- காயம்இல்கடவுள் - அசரீரியானது, காயம் எங்கண்உம் நின்று ஒலி எழு பரந்து - ஆகாயமெங்கும் நின்று ஒலியெழும்படி பரந்து, அ கடவுள் நாயகன் தனக்கு - தேவராசனான அந்த இந்திரனுக்கு, பரிவுடன்-அன்போடு, நவை தீர் நல் உரை நவின்றது - குற்றம்நீங்கிய நல்ல வார்த்தைகளைச் சொல்லிற்று; (எ-று.) - அதனை, மேற்கவியிற் காண்க. மைத்துனன் என்ற சொல், இங்கு, அத்தையின்மகனை யுணர்த்தும், அவன் துவசம் இடி துணித்து என்று இயைத்து - அவ்விந்திரனுக்குக்கொடியாகிற இடியைத் துண்டித்து என்றும் |