(இ - ள்.) வாசவன் அளித்த விமானமீது - இந்திரன் தந்த விமானத்தின்மேல், சேதிமா மரபோன் வசு எனும்ஒருவன் - சேதி வமிசத்தில் தோன்றியவனான வசுவென்றஒருவன், கேசரன் என - ஆகாசத்திற் சஞ்சரிக்கின்ற தேவசாதியான்போல, போம் -செல்லுகின்ற, விசும்பிடை - ஆகாயத்தினிடத்தே, மனையாள் கிரிகையை நினைந்து -மனையாளாகிய கிரிகையென்பாளை எண்ணி, உடல் கெழுமி - உடம்பிற்காமவிகாரங்கொண்டு, நேசமொடு - அன்புடனே, இதயம் உருகும்அ கணத்தில் - நெஞ்சம் உருகுகின்ற அந்த க்ஷனத்திலே, நினைவு-, அற -இன்றிக்கேயிருக்க, [தன்னடைவே], விழுந்த-, வீரியம் - சுக்கிலமானது, மேய் தேசவன்- தேஜோமயமான மேனியைப் படைத்த சூரியன், அளித்த - தந்த, நதியிடை -யமுனாநதியிலே, ஒரு பால் - ஒருபுறத்திலே, திரள் தரளம் என - திரண்டவடிவுள்ளமுத்துப் போல, சிந்தியது-; (எ-று.) சேதிபனான வசுவென்பவன் நோன்பால் வானத்திற்செல்ல வல்ல விமானத்தைத்தேவேந்திரனருளாற் பெற்றான்: அன்னான் வானத்திற் சஞ்சரிக்கையில் ஒருகால்தன்மனைவியை நினைந்து காமவிகாரங்கொண்டதனாற் சுக்கிலம்தோன்ற, அதனைஒருமரத்தின் இலையிலேந்தி ஒரு சியேனமென்னும் பறவையை யழைத்துக் கொடுத்துக்கிரிகையினிடத்துச் சேர்ப்பிக்குமாறு சொன்னான்: சொல்லவும், வேறொருசியேனப்பறவை அதனை இரையென்று கருதிப்பொர, அந்தச்சுக்கிலம் யமுனைநதியின்புனலில் முத்தின் திரள் போல விழுந்திட்டதென விளக்கங் காண்க.மற்றொருமனையாள் கிரீடையையென்றும் பாடம். (112) 105. | ஒருமுனிமுனிவாலரமகளொருத்தி மீனமாயுற்பவித்துழல்வாள், இரையெனவதனைவிழுங்குமுன்கருக்கொண்டீன்முதிர்காலை யிலதனைப், பரதவர்வலையினகப்படுத்தரியப் பாலகனொருவனுமிவளும், இருவருமிந்தமீன்வயிற்றிருந்தார் யமுனையும்யமனுநேரெனவே. |
(இ-ள்.) ஒருமுனிமுனிவால் - ஒருமுனிவனுடைய வெகுளியினால், அரமகள் ஒருத்தி - ஒருதேவமாது, மீனம் ஆய் உற்பவித்து உழல்வாள் - மீனாகித்தோன்றி யலைபவளாய்,- அதனை - (யமுனையின் ஒருபாற் சிந்திய) அந்த (வசுவின்) வீரியத்தை, இரை என - (தனக்கு உரிய) உணவென்று, விழுங்குமுன் - உட்கொள்வதற்குமுன்னமே [உட்கொண்டவுடனே யென்றபடி], கரு கொண்டு - கருப்பமடைந்து, ஈன்முதிர் காலையில் - (அந்தக்கருப்பம்) ஈனுமாறு முதிர்ச்சி யடைந்ததருணத்தில்,- அதனை - கருக்கொண்ட அந்த மீனை, பரதவர் - வலைஞர், வலையின்அகப்படுத்து - வலையில் அகப்படுமாறு செய்து, அரிய - அரிந்துபார்க்க, - பாலகன்ஒருவன்உம் - ஒரு குமாரனும், இவள் உம் - இந்தக்குமாரியும், இருவர் உம் -(ஆகிய) இருவர்களும், யமுனை உம் யமன் உம் நேர் என-, இந்த மீன் வயிற்றுஇருந்தார்-: சூரியபுத்திரியாகிய யமுனைநதியின் மீன்வயிற்றிலே தோன்றிய குமார குமாரிகட்கு, சூரியனுக்குப் புதல்வனும் புதல்வியுமான யமனையும் யமுனையையும் உவமைகூறினார். ப்ருஹ்மசாபத்தினால் அத்திரிகையென்ற தேவமாது மீனமாயினாளென்று கூறப்படும்: ஆகவே, ஒருமுனி யென்றது - பிரமதேவனைக் காட்டும். (113) |