பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்93

அப்போது, அம்பிகை-, அம்பகம் - (தன்) கண்கள், ஒருக்காலும் சிறிதும்,
மலர்ந்திலள்- திறத்தாளில்லை; (எ-று.)

     வியாசமுனிவன்  வந்து சேரும்போது அம்பிகை அச்சத்தால் தன் கண்களை
மூடியவண்ணமே யிருந்தனளென்பதாம். புன்மணம் நிறைந்து என்பதற்கு -
கலவைச்சந்தனம் முதலியவற்றின் நன்மண மில்லாமல் என்று கருத்துக்காணலாம்:
"அஹ்ருத்யகந்தம்" என்று பாலபாரதத்திலுள்ளது. ஒளிகுறைந்தொல்கப்புனையுமெய்
என்றது- உடம்பு விளக்கமுறாதவாறு மீசை தாடி உடல்மயிர் முதலியவற்றோடு
கூடியவனாய் என்றவாறு. பொழுது - ருதுஸ்நாநம்செய்த பின் பன்னிரண்டு
நாள்களுக்குஉட்பட்ட கருக்கொள்ளுதற்கு உரியகாலம்.

13.- கருத்தோற்றுவித்து, வியாசன் விழிப்புலனில்லாமகவு உதிக்குமென்று
தாயினிடம் தெரிவித்தல்.

பராசரன்றருமுனிநினைவொடு கருப்பதித்துமீளவுஞ்சென்று
நிராசைநெஞ்சினனவசரத் தவளிடைநிகழ்ந்தமெய்க்குறிதன்னால்
கராசலம்பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற்பெற்றோர்
இராசகுஞ்சரம்பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற்கென்றான்.

     (இ-ள்.) பராசரன் தரு முனி - பாராசரமுனிவன் பெற்ற புதல்வனான வியாசன்,
நிராசை நெஞ்சினன் - ஆசையற்ற மனமுடையவனாய், நினைவொடு - கருத்தோடு,
கரு பதித்து - கருப்பத்தைப் பதியச்செய்து, மீள உம் சென்று - மீண்டும்
தாயினிடம்போய், அவசரத்து - (தான்) சென்றபோது, அவளிடை-அந்த
அம்பிகையினிடத்திலே,நிகழ்ந்த-, மெய் குறி தன்னால் - உடலினடையாளத்தினால்,
'காயம் ஒன்றினில் - தன்னோருடம்பில், கராசலம் பதினாயிரம் பெறு வலி -
பதினாயிரம் யானை கொண்டுள்ள பலத்தை, பெற்று - அடைந்து, ஓர் இராச
குஞ்சரம்- ஒரு ராஜசிரேஷ்டன், பிறந்திடும் - பிறப்பான்: அதற்கு - அந்த
அரசமகவுக்கு, விழிபுலன்இல்லை - கண்ணாகியபொறி இருக்க மாட்டாது, '
என்றான் - என்று கூறினான்;(எ-று.)

     நிராசைநெஞ்சினன் என்றது - தாய்மொழியின்படி நடக்கவேணு மென்பதானால்
அம்பிகையைச் சேர்ந்தானேயன்றிக் காமவசத்தனாய்ச் சேர்ந்தவனல்ல னென்பதைக்
குறிப்பிக்கும். நிகழ்ந்த மெய்க்குறி தன்னால் என்றானென்க. இராசகுஞ்சரம்
என்பதற்குஏற்ப அதற்கு என்று அஃறிணையாற் கூறினார். கராசலம் - கைம் மலை
யென்பது,பொருள்: அசலமென்பது கரமென்ற அடைமொழியின் குறிப்பால்
யானையென்றுபொருள்படும். அவஸரம் - வேளையென்று பொருளுள்ள வடசொல்:
பொற்றோளிராசகுஞ்சரம் எனவும் பாடம்.                            (168)

14.- அம்பாலிகையினிடம் பூமியைக்காக்கவல்ல
ஒருபுதல்வனைத் தருமாறு வேண்டுதல்.

மீளவுந்தலைப்புதல்வனை நோக்கியேமிகமகிழ்வுறாவன்னை
தூளவண்சடைத்தோன்றலம் பாலிகைசுதனொருவனைநல்க
நாளபங்கயப்பதியென மதியெனநலந்திகழ்கவிகைக்கீழ்
ஆளவம்புவியவனென நினைந்தினியளிக்கவென்றருள்செய்தாள்.

     (இ-ள்.) தலைபுதல்வனை - (தனது) முதற்புதல்வனாகியவியாசமுனிவனை,
மீளஉம் நோக்கி - மறுபடியும் பார்த்து, மிகமகிழ்வுஉறா - (பிறவிக்