குருடனாம் புதல்வன் பிறப்பானென்ற மொழியைக்கேட்டதனால்) மிக்க மகிழ்ச்சியடையாத, அன்னை - தாயான காளி,- 'தூள வள் சடை தோன்றல் - தூளியைக்கொண்ட வளப்பமுள்ள சடையையுடைய குமாரனே! அம்பாலிகை-, சுதன் ஒருவனை நல்க - ஒரு புத்திரனைப் பெறட்டும்: நாளம் பங்கயம் பதி என - (நீண்ட) தண்டையுடைய தாமரைக்குக் கணவனான சூரியன்போலவும், மதிஎன - சந்திரன் போலவும் (விளக்கமுடையவனாகித்தோன்றுகின்ற),-அவன்-அப்புதல்வன், அம்புவி- அழகியபூமியை, நலம் திகழ் - அழகு விளங்குகின்ற, கவிகைக்கீழ் - வெண்கொற்றக் குடையின் கீழ், ஆள-ஆட்சி செய்க, என-என்று, நினைந்து-, இனி அளிக்க - இனி அளித்தருள்வாய், ' என்று-, அருள்செய்தாள் - கூறினாள்; (எ-று.) இங்குப் பாலபாரதத்தில் "குமாரமுத்பாதய தத்ர தாத்ருசம் - விஜேஷ்யதே பூவலயம் புஜேந ய: [தன்தோள்வலியால் பூமண்டலத்தை வெற்றிகொள்ளவல்ல அப்படிப்பட்ட புதல்வனை அந்த அம்பாலிகையினிடம் உண்டாக்குக]" என்று கூறியிருப்பதுகாண்க. தூள் - விபூதியுமாம். தூள - குறிப்புப்பெயரெச்சம். நல்க, ஆள -செயவெனெச்சமாகக் கொண்டு கூறினுமாம். (169) 15.- தாய்சொற்படியே வியாசன் அம்பாலிகை மனை சேர அவள் அம்முனிவனைக் கண்டு கருத்தோன்றுமுன் நாணத்தாலும் அச்சத்தாலும் உடல் வெளுத்தல் கிளைத்திடுந்துகிர்க்கொடிநிகர் சடையவன்கேட்டுநுண்ணிடையேபோல், இளைத்திடுங்கவின்மெய்யுடை யவண்மனையெய்தலுமிவனைக்கண்டு, உளைத்திடுங்கருத்துடன்வெரீஇ வருபயனொன்றையுநினையாது, விளைத்திடுங்கருவிளையுமுன்மடவரன்மெய்யெலாம் விளர்த்திட்டாள். |
(இ-ள்.) கிளைத்திடும் - பலபிரிவுகொண்டு விடுகின்ற, துகிர் கொடி நிகர் - பவழக்கொடியையொத்த, சடையவன் - சடையையுடைய வியாசன், கேட்டு - (தாய் கூறியதைக்) கேட்டு, நுண் இடைஏ போல் இளைத்திடும் கவின் மெய் உடையவள் - நுண்ணியஇடையே போல இளைத்துள்ள அழகிய உடம்பைக்கொண்டவளான அம்பாலிகையின், மனை - வீட்டை, எய்தலும் - அடைந்தவுடனே,- இவனை - இந்த முனிவனை, கண்டு-, உளைத்திடும் கருத்துடன் - (நாணத்தினால்) வருந்திய மனத்துடனே, வெரீஇ - அச்சங்கொண்டு, வரு பயன் ஒன்றை உம் நினையாது - தனக்கு நேரக்கூடிய பயனொன்றையும் எண்ணாமல், விளைத்திடும் - (அம்முனிவன்) உண்டாக்கப்போகின்ற, கரு - கருப்பம், விளையும் முன் - பலிப்பதற்குமுன்னமே, மடவரல்- அந்த அம்பாலிகையென்ற பெண், மெய்எலாம் விளர்த்திட்டாள்- உடம்புமுழுவதும் வெளுத்திட்டாள்; (எ -று.) இங்குப் பாலபாரதத்தில் "விலோக்ய ஸாசைந முவாஹலஜ்ஜிதா - விபாண்டுரத்வம் புரஏவ தௌஹ்ருதாத் [அந்த அம்பாலிகையும் இவனைப் பார்த்து நாணமுற்றுக் கருக்கொள்ளுமுன்னமே வெண்ணிறமுடைமையை மேற்கொண்டாள்]" என்ற கூறியிருப்பது காண்க. (170) |