பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்95

16.-அம்பாலிகையிடம் கருவளித்த வியாசன்
தாயினிடத்துச் சென்று அருந்திறற்குமாரன் வெண்ணிறத்
தோடு பிறப்பானென்று தெரிவித்தல்.

அருந்தபோநிதியவளிடத் தினுங்கருவருளியக்கணத்தேகி
இருந்தவாறுதனன்னையோ டினிதுரைத்திமையவனெனச்சென்றான்
பெருந்தராதலந்திறலினா லொருதனிபெறுமுறையவன்பெற்ற
முருந்தவாணகைமருட்சியால் விளர்த்திடுமுழுவதுமுடலென்றே.

     (இ-ள்.) அருந் தபோநிதி - அரியதவத்திற்கு உறைவிடமான அந்த விசயன்,
அவளிடத்தின்உம் - அந்த அம்பாலிகையினிடத்திலும், கரு அருளி - கருப்பத்தை
யுண்டாக்கியருளி,- அ கணத்து - அந்த நொடியிலேயே, ஏகி - (தன்தாயிருந்த
இடத்துச்) சென்று, 'பெருந் தரா தலம் - பெரியபூமியை, திறலினால் - (தன்)
வல்லமையினால், ஒரு தனி பெறும் - தன்னந்தனியே பெற்று  ஆளவல்ல,
முறையவன் - முறைமையையுடைய குமாரன், பெற்ற முருந்தம் வாள்நகை -
(தன்னை)ஈன்ற மயிலிறகினடிபோன்ற ஒளிபொருந்திய பற்களையுடையவளான
தாயின்,மருட்சியால் - மருண்டு உடல் விளர்த்த தன்மையால், உடல்முழுவதும்
விளர்த்திடும் -உடல் முழுவதும் வெளுத்திருப்பான்,' என்றே-, இருந்த ஆறு-
(தான் சென்றபோதுஅம்பாலிகை) இருந்த வகையை, தன் அன்னையோடு - தன்
தாயினிடம், இனிதுஉரைத்து - இனிதாகச்சொல்லிவிட்டு, இமையவன் என
சென்றான் - தேவன்போலமறைந்திட்டான்; (எ-று.)                    (171)

17.- திருதராட்டிரனும் பாண்டுவும் பிறக்க, அவர்களைச் சத்தியவதி
காணுதல்.

வேதபுங்கவனகன்றுழி வலியுடைவிழியின்மைந்தனும்யாரும்
பாதபங்கயந்தொழத்தகுந் திறலுடைப்பாண்டுவென்பவன்றானும்
பூதலம்பெருங்களிப்புறக் குருகுலம்பொற்புறப்பொழுதுற்றுச்
சாதராயினரவ்விரு மகவையுஞ்சத்தியவதிகண்டாள்.

     (இ-ள்.) வேதபுங்கவன் - வேதம்வல்ல அந்தவியாசன், அகன்ற உழி -
சென்றிட்டபின், வலி உடை - (பதினாயிரம்யானை) வலியுள்ள, விழி இல்
மைந்தன்உம்- கண்ணில்லாத குமாரனாகிய திருதராஷ்டிரனும், யார்உம் -
பாதபங்கயம் தொழ தகும்- எப்படிப்பட்ட பகைவரும் (தன்) பாததாமரையை
வணங்கத்தக்க, திறல்உடை -வலிமையையுடைய, பாண்டு என்பவன் தான்உம் -
பாண்டுவென்பவனும்,- பூதலம்பெருங் களிப்பு உற - பூமி பெருமகிழ்ச்சியடையவும்,
குருகுலம்  பொற்புஉற -குருகுலம் அழகுறவும், பொழுது உற்று- (ஈனுங்) காலம்
வரவே, சாதர் ஆயினர் -தோன்றினவரானார்கள்: அ இருமகவைஉம் - இந்த
இரண்டு புத்திரரையும், சத்தியவதி- (அப்புத்திரரின் பாட்டியான)
சத்தியவதியென்பவள், கண்டாள் - பார்த்தாள்; (எ-று.)

     சத்தியவதியென்பதும், சந்தனுவின் இரண்டாம்மனைவியாகிய யோசனகந்தியான
காளிக்குஒருபெயர். புங்கவன் - புருஷசிரேஷ்டன். ஜாதர் - வடசொல்.     (172)