பக்கம் எண் :

118பாரதம்ஆரணிய பருவம்

'அன்போடழல்வருபாவையை யடைவுன்னி யளித்தாய்'என்றாள்.
இரண்டாமடியில், வன்போடு என்றும் பிரிக்கலாம்.  நான்காமடியில்
அன்போஎன்றுமாம்.  நின்போன்மரபுடையார் என்றும் பாடம்.     (163)

164.எனமன்னனைநீபேடியரியல்பாகெனவிதியா
நனைமென்குழன்மலர்மங்கையுநாணுந்நலமுடையாள்
தனிகங்குலினிடைசென்றுயர் தன்கோயில்புகுந்தாள்
அனலன்றருசிலைவீரனுமஃதெய்தினனந்தோ.

     (இ - ள்.) என-என்று சொல்லி, மன்னனை-அருச்சுனனை,நீ பேடியர்
இயல்பு ஆகு என-நீ பேடிகளின் தன்மையாவாயென்று, விதியா-சாபமிட்டு,
நனைமெல் குழல் மலர் மங்கைஉம் நாணும் நலம் உடையாள்-
அரும்புகளைச்சூடியமென்மையான கூந்தலையும்
செந்தாமரைமலரில்வீற்றிருக்கின்ற இலக்குமியும் (தான் ஒப்பாகாமல்)
வெட்கமடையும்படியான அழகையுமுடைய ஊர்வசி, தனி-தனியே,
கங்குலினிடை-இராத்திரியிலே, உயர் தன் கோயில் - உயர்ந்த தனது
மாளிகையை, சென்று புகுந்தாள்-போய்ச் சேர்ந்தாள்;அனலன் தரு சிலை
வீரன்உம்-அக்கினியினாற்கொடுக்கப்பட்ட காண்டீவ வில்லையுடைய
வீரனானஅருச்சுனனும், அஃது எய்தினன்-அப்பேடித்தன்மையை
யடைந்தான்;அந்தோ-ஐயோ!

    கோயில்-சிறந்த வீடு:கோ இல் எனப் பிரிக்க:யகரம் பெற்றது,
இலக்கணப்போலி.  அந்தோ - இரக்கச்சொல்:ஹந்த என்ற வடசொல்லின்
விகாரம்:சிங்கள நாட்டினின்று வந்துவழங்கிய திசைச்சொ லென்பாரு முளர்:
இது-கவி இரங்கிக் கூறியது.  நாணுந்நலம்-செய்யுளோசை நோக்கிவந்த
விரித்தல்.                                              (164)

165.-சாபமேற்றஅருச்சுனன் வருந்தி யுறங்கிக்கிடத்தல்.

ஆடித்திருமுகமன்னவ னனுசன்றருவிசயன்
பேடிப்பெயர்நாமோபெறு வோமென்றெழில்வடிவம்
வாடிப்பெரிதுளநொந்தணி மாசற்றதொர்தூசான்
மூடித்துயில்கொண்டான்மணி முடிமன்னவர்திலகன்.

     (இ - ள்.) மணி முடி மன்னவர் திலகன் - இரத்தினங்களைப்பதித்த
கிரீடத்தையுடைய அரசர்களுக்குத் திலகம்போலச் சிறந்தவனாகிய,ஆடி
திருமுகம் மன்னவன் அனுசன் தரு விசயன் - கண்ணாடிபோன்றஅழகிய
முகத்தையுடைய திருதராட்டிரனது தம்பியாகிய பாண்டுமகாராஜன் பெற்ற
புத்திரனாகியஅருச்சுனன், பேடி பெயர் நாம்ஓ பெறுவோம் என்று-பேடி
எனும் பெயரை (வீரர்களிற்சிறந்த) நாமா பெறக்கடவோம் என்று எண்ணி,
எழில் வடிவம் வாடி - அழகிய உடம்பு வாட்டமடைந்து, பெரிது உளம்
நொந்து-மிகவும் மனம்வருந்தி, அணி மாசு அற்றது ஒர் தூசால் மூடி -
அழகியதும் குற்றமற்றதுமான தொரு ஆடையினால்(உடம்பை) மறைத்துக்
கொண்டு, துயில்கொண்டான் - உறங்கிக் கிடந்தான்;(எ - று.)