பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்119

     ஆடித்திருமுகம்- பிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாத
கண்ணாடிபோன்றுபிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாது
செல்வப்பொலிவு தோன்றும்முகம்.  நாமோபெறுவோம் - உயர்வுபற்றிவந்த
தன்மைப்பன்மை;ஓகாரம் எதிர்மறை முகத்தால், உயர்வை விளக்கிற்று.
துயில்கொள்ளுதல் - உற்சாகங்குன்றி வருந்தி வாடிக்கிடத்தல்.       (165)

166.-சூரியோதய வருணனை.

அக்காலையில்விசயன்றனதிடராரிருளகலச்
செக்காவியுமரவிந்தமும் வரிவண்டொடுதிகழ
மைக்காரிருள்வெள்ளம்பில வள்ளத்திடைவடியத்
தொக்கானுயர்குணதிக்கினி லகிலந்தொழுசூரன்.

     (இ - ள்.) அகாலையில்- அந்தக்காலத்தில், விசயன் தனது இடர்
ஆர் இருள் அகல - அருச்சுனனது துன்பமாகிய நிறைந்த இருள் நீங்கவும்,-
செக்காவிஉம் அரவிந்தம்உம் வரி வண்டொடு திகழ - செங்கழுநீர்மலர்களும்
தாமரைமலர்களும் இசைபாடுதலையுடைய வண்டுகளுடனே அலர்ந்து
விளங்கவும், மை கார் இருள் வெள்ளம் பிலம் வள்ளத்திடை வடிய -
மையையொத்துக் கருமையான இருளினதுதிரள் பாதாளலோகமாகிய
கிண்ணத்திலே செல்லவும்,-அகிலம் தொழு சூரன் - உலகத்தவ ரெல்லாராலும்
வணங்கப்படுகின்ற சூரியன், உயர் குண திக்கினில் - உயர்ந்த கிழக்குத்
திசையில், தொக்கான் - வந்து சேர்ந்தான் [உதித்தான்]; (எ-று.)

     மறுநாட்காலையில்இந்திராதிதேவர்களின் வேண்டுகோளினால்
ஊர்வசியினது சாபத்தாலாகிய பேடிவடிவம் அருச்சுனன் வேண்டும்நாளில்
ஒரு வருஷகாலம் வரும்படி வரமாக மாறுதலைக்கருதி
'விசயன்தனதிடராரிருளகல'என்றார். செக்காவி - செங்காவியென்பதன்
வலித்தல்.  செங்கழுநீரும் தாமரையும் இரவிற்குவிந்து பகலில் மலர்பவை.
வரி - உடம்பிலுள்ள கோடுமாம்.  இனி, வரி வண்டு என்பதைச்
சிலேடையாக்கொண்டு, செங்குவளைநீண்ட அம்பொத்துக்
குவிந்துவிளங்கவும், அரவிந்தம் இசைவண்டுடனே அலர்ந்து விளங்கவும்
என்பாருமுளர்.  வண்டு - அம்பும், அறுகாற் பறவையும்.  பிலவள்ளம்
என்றது - கிண்ணம்போல உள்ளாழமாகிய சுரங்கத்தை;பகலிலும்
அவ்விடங்களிலே இருள்நிறைந்திருக்கு மென்க.  சூரன்=ஸூரன்;
அகிலந்தொழுசூரன்="பலர்புகழ்ஞாயிறு"என்பது, திருமுருகாற்றுப்படை.
இது, தன்மை நவிற்சியணி.                               (166)

வேறு.

167.-முப்பத்துமூவர்தேவரோடு இந்திரன்
சபாமண்டபத்துவருதல்.

கதிரு தித்தவக் காலையின்மாமறை
முதல்வர் முப்பத்து மூவருஞ் சூழ்வரப்
புதல்வ னுற்ற துணரான் புரந்தரன்
விதம ணிப்பணி மண்டப மேவினான்.