அஞ்சல் -பயப்படாதே',என்றான்- என்று சொன்னான்:(யாரென்னில்),- முன் - முன்னொருகாலத்தில்,ஒரு தையலால் பிணி உழந்து - (அகலியை யென்னும்) ஒருபெண்ணின் காரணமாக(க்கௌதமரிட்ட) சாபநோயினால் வருந்தி, பேர் பெறும் - (பின்பு அவரது அருளால் ஆயிரங்கண்ணனென்று ஒரு) பேரைப் பெற்ற, பெற்றியான் - தன்மையையுடையவனாகியஇந்திரன்; (எ-று.) இந்திரன்பெண்காரணமாக முதலிற் பெருஞ்சாபத்தைப் பெற்று வருந்திப் பின்பு அச்சாபம் ஒருவாறு தணியப்பெற்றவனாதலால், தன்னைப்போலவேபெண்காரணமாகப் பெருஞ்சாபத்தைப் பெற்ற புத்திரனுக்குத் தான் உறுதிகூறினானென்பார் 'ஒருதையலாற் பிணியுழந்துமுன் பேர்பெறும் பெற்றியான்'என்றார்:ஏற்கவே, அனுபவித்தவன் உணராதானுக்கு அறிவு உறுத்தினானென்றவாறு. கௌதமமுனிவரது மனைவியும்சதானந்த முனிவரது தாயுமாகிய அகலிகையின்மீது பலநாளாய் விருப்பங்கொண்டிருந்த தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் கௌதம ராச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங் காலத்துக் கோழி கூவுவதுபோலக் கூவ, அதுகேட்ட முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்ததென்று கருதிக் காலைக்கடன் கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு அவளோடு கலக்கையில், அவளும் தன் கணவனல்லனென்று அறிந்தபின்பும் விலக்காமல் உடன்பட்டு இருக்க. அதனைஞானதிருஷ்டியால் அறிந்துவந்த அம்முனிவர் அகலிகையைக் கருங்கல் வடிவமாம்படியும் இந்திரனை உடம்புமுழுவதும் ஆயிரம் பெண்குறியை யடையும்படியும் சபித்து, உடனே அவர்கள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, முறையே ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து அக்கல்வடிவம் நீங்கி முன்னையஉருவம்அடைவாயென்றும், அப்பெண்குறிகள் பிறர்க்குக் கண்களாகப் புலப்படுக என்றும் அனுக்கிரகிக்க, பின்பு அவ்வாறே சாபந்தணிந்தனரென்பது, ஈற்றடியிற் குறித்த கதை. அன்பொடு,ஒடு-அடைமொழிப்பொருளது. உறத்தழுவுதல் - இறுகத் தழுவுதல்: காடாலிங்கனம். தழுவி=தழீஇ: சொல்விகாரப்பட்டு அளபெடுத்தது. கணிகை என்பதற்கு - செல்வமுடையவர்களையே எண்ணுபவளென்பது உறுப்புப்பொருள். கடுங்கொடு - ஒருபொருட்பன்மொழி. சாபம்=ஸாபம். வெகுண்டு கூறும்மொழி. அஞ்சல் - எதிர்மறையேவல். தையல் - அழகு: அதனையுடையாளுக்குஆகுபெய ரென்பர். (171) 172.-உருப்பசியுள்ளஇடத்துக்கும் தேவேந்திரன் செல்ல, அவள்அஞ்சிவந்து வணங்குதல். அன்னமென்னடை யாயிழைதன்னுழைத் துன்னினன்சுர ரோடுஞ்சுரேசன்போய் |
|