பக்கம் எண் :

192பாரதம்ஆரணிய பருவம்

பொழுதும் இறவாமற்பிழைத்துள்ளவர்களுமாகிய, இருவோர்-இரண்டு பேர்,
உளர்-உண்டு;(எ - று.)

     'கன்னங்கரிய'என்றது - மிகு கறுப்பின் குறிப்பாய் வழங்கி
வருவதொரு சொல்விழுக்காடு.  என்றும் உள்ளார் - (புகழினால்)
எப்பொழுதும் நிலைபெற்றுள்ளவரென்றுமாம்.                 (282)

107.அம்மாதர்தந்தைதனைநோக்கியனந்தகாலஞ்
செம்மால்வரையிற்றவஞ்செய்தனர் செய்தநாளில்
மைம்மான்விழியார்தமக்கந்த வனசவாணன்
எம்மாலிசைத்தற்கிசையாத வரங்களீந்தான்.

     (இ - ள்.) அமாதர் - அப்பெண்களிருவரும், தந்தைதனைநோக்கி -
(படைத்தற்கடவுளாதலால் யாவர்க்கும்) பிதாவாகிய பிரமதேவனைக்குறித்து,
அனந்த காலம் - அளவிறந்த காலம், செம் மால் வரையில்-சிவந்த பெரிய
மேருமலையிலேயிருந்து, தவம் செய்தனர் - தவத்தைப் பண்ணினார்கள்:
செய்த நாளில் - (அங்ஙனம்) பண்ணிய காலத்தில், மை மான் விழியார்
தமக்கு-அஞ்சனமிட்ட மான் பார்வையொத்த கண்களையுடைய
அம்மகளிர்க்கு, அந்த வனசம் வாணன் - தாமரை மலரில் வாழ்கின்ற
அப்பிரமன், (பிரசன்னனாகி),எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள்
ஈந்தான் - என்போலியராற் சொல்லுதற்கு முடியாத பலவரங்களைத்தந்தான்:
(எ-று.)

     செம்பொன்வரையென்பார், 'செம்மால்வரை'என்றார். மான் -
அதன் பார்வைக்கு முதலாகுபெயர்.  வநஜம் - நீரிற் பிறப்பது;வநம் - நீர்.
                                                      (283)

108.தம்மக்களாயவசுரேச ரதிதிதந்த
அம்மக்கடம்மாலழியாமையு மாடகத்தான்
மும்மைப்புரம்போல்விசும்பூர்தரு மொய்ம்பினிந்தச்
செம்மைப்புரமுங்கொடுத்தானத் திசைமுகத்தோன்.

     (இ - ள்.) தம் மக்கள் ஆய - தம்மிருவரது புத்திரர்களாகிய, அசுர
ஈசர் - அசுரத்தலைவர்கள்,அதிதி தந்த அ மக்கள் தம்மால் - அதிதி
யென்னும் காசியபர்மனைவிபெற்ற புத்திரர்களாகிய அத்தேவர்களால்,
அழியாமைஉம் - அழிவடையாதிருத்தலாகிய வரத்தையும், ஆடகத்தால் -
பொன்னாலாகிய,மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரு மொய்ம்பின் -
திரிபுரம்போல ஆகாயத்திலே பறந்து செல்லும் வலிமையையுடைய, இந்த
செம்மை புரம் உம் - அழகுள்ள இந்த இரணிய நகரத்தையும், அத்திசை
முகத்தோன் - நான்கு முகங்களையுடைய அப்பிரமன், கொடுத்தான் -
(அப்பெண்களுக்குத்) தந்தான்;(எ - று.)

     அதிதியின்மக்களாதலால், தேவர்களுக்கு 'ஆதித்தியர்'என்றும்,
'ஆதிதேயர்'என்றும் பெயர்கள் உண்டு.  அம் மக்கள்-அழகிய மக்கள்
என்றுமாம்.                                           (284)