பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்201

124.-அருச்சுனன்கூறியது கேட்டுக் காலகேயர்
படைவிடுதல்.

காலகேயர்விசயனின்று கட்டுரைத்தவுறுதிகேட்டு
ஆலகாலமெனவுருத்த ழன்றுபொங்கியயின்முனைச்
சூலநேமிபாலம்வெய்ய சுடுசரந்துரத்தினார்
நீலமேனிசெம்புணீரி னானிறஞ்சிவக்கவே.

     (இ-ள்.)காலகேயர்-,விசயன் நின்று கட்டு உரைத்த உறுதிகேட்டு -
அருச்சுனன் அஞ்சாமல் நின்று திடமாகச் சொல்லிய உறுதிவார்த்தையைச்
செவியுற்று, ஆலகாலம் என - (பாற்கடலில் தோன்றிய)விஷம்போல, உருத்து
- கோபித்து, அழன்று - கொதித்து, பொங்கி - மேலெழுந்து,-நீலம்மேனி-
அருச்சுனனது நீலநிறமுள்ள உடம்பு, செம் புண் நீரினால்-
விரணங்களினின்றும் பெருகுகின்ற சிவந்த இரத்தத்தால், நிறம் சிவக்க -
செம்மைநிற மடையும்படி, அயில் - வேல்களையும்,முனை-கூர்
நுனியையுடைய, சூலம் - சூலங்களையும்,நேமி-சக்கரங்களையும்,பாலம்-
மழுக்களையும்,வெய்ய சுடு சரம்-கொடிய (பகைவரை) வருத்துகிற
அம்புகளையும்,துரத்தினார்- (அவன்மீது) பிரயோகித்தார்கள்;(எ-று.)

    ஆலகாலம்=ஹாலாஹலம். பாலம்=பிண்டிபாலம்.          (300)

125.-அவுணருடையஆயுதவேகத்தின் வருணனை.

விண்சுழன்றுதிசைசுழன்று வேலையுஞ்சுழன்றுசூழ்
மண்சுழன்றுவரைசுழன்று வானினின்றவானுளோர்
கண்சுழன்றுயாதினுங்க லங்குறாதகலைவலோர்
எண்சுழன்றுமற்றுமுள்ள யாவையுஞ்சுழன்றவே.

     (இ-ள்.) (அவர்கள் ஆயுதங்களைமேல் வீசிய வேகத்தால்),
விண்சுழன்று-ஆகாயங் கலங்கி, திசை சுழன்று - திக்குக்கள் நிலைதடுமாறி,
வேலைஉம்சுழன்று - கடலுஞ் சுழற்சிபெற்று, சூழ் மண் சுழன்று -
(அக்கடல்) சூழ்ந்த பூமி சுற்றி, வரை சுழன்று - மலைநிலைபெயர்ந்து,
வானில் நின்ற வான் உளோர் கண் சுழன்று - ஆகாயத்திற் பொருந்திய
சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்களது இமையாக்கண்கள் திகைப்படைந்து,
யாதின்உம் கலங்குறாதகலைவலோர்எண் சுழன்று - எந்தக்
காரணத்தினாலும்நிலைமாறுதலில்லாதநூல்வல்ல யோகியர்களது மனமுஞ்
சலித்து, மற்றுஉம் உள்ள யாவைஉம் - இன்னும் உள்ள எல்லாப்
பொருள்களும், சுழன்ற-சுழற்சிபெற்றன;(எ-று.)-சொற்பின்வருநிலையணி. (301)

126.-அருச்சுனன்அவர்கள் படைக்கலங்களுக்கு விலகி,
அம்புபொழிதல்.

அவர்விடுத்தபடைகள்யாவு மழியவானிடைக்கணைக்
கவர்தொடுத்துவிலகிமீள வவர்கள்காயமெங்கணும்
துவர்நிறத்தகுருதிசோர் தரச்சரந்துரத்தினான்
தவரினுக்கிராகவன்கொ லெனவருந்தனஞ்சயன்.