பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்205

132.-அருச்சுனன்அம்புசெலுத்திப் பொருதல்.

இவருயிர்கவர்தர விடமிதுவெனவே
நவையறுதிறலுடை நகுசரமுகையா
அவரவரகலமு மணிகிளர்கரமும்
தவருடன்விழவிழ வொருதனிபொருதான்.

     (இ-ள்.)(அப்பொழுது அருச்சுனன்), 'இவர்உயிர் கவர் தர -
இவ்வசுரர்களின் உயிரை வாங்குவதற்கு, இடம்-தக்கசமயம், இது -
இதுவாம்,'என - என்று எண்ணி,-நவை அறு திறல் உடை - குற்றமற்ற
வலிமையையுடைய, நகு சரம் - விளங்குகின்ற அம்புகளை,உகையா-
செலுத்தி,-அவர்அவர்-அவ்வசுரர்களின், அகலம்உம் - மார்பும், தவருடன்
- (பிடித்த) விற்களுடனே, அணி கிளர் கரம்உம் - அழகுவிளங்குகின்ற
கைகளும், விழவிழ - மிகுதியாக விழும்படி, ஒரு தனி பொருதான்-
ஒப்பில்லாதபடி தனியனாய்நின்று போர்செய்தான்;(எ-று.)

     கவர்தல் -கொள்ளைகொள்ளுதல்.காலமும் இடமாதல்பற்றி, இங்கே
'இடம்'எனப்பட்டது.  இனி, முதலிரண்டடிக்கு - இவருயிரை யொழித்தற்கு
இடம் இதுவென்னும்படி (மார்பில்) அம்பு செலுத்தி யென்றுமாம்.  அம்பின்
வலிக்குக் குற்றமாவது-குறித்த இலக்கிற்சென்று படாமையும், பட்டும் அதனை
அழியாமையுமாம்.  நகுசரம் - வினைத்தொகை;இதில், பகைவரது
கிளர்ச்சியை நோக்கிப் பரிகசித்துச் சிரிக்கின்ற அம்பு என்னும் பொருளுந்
தொனிக்கும்.  ஒருதனி - தன்னந்தனி என்றாற்போலமிகுதனியுமாம்.
உதையா என்றும் பாடம்.                                 (308)

133.-அருச்சுனனதுகணையைவிலக்கி, அவுணர்
எதிராகப் படைதொடுத்தல்.

அவன்விடுமடுகணையடையவுநொடியில்
பவனனதெதிர்சரு கெனநனிபறியக்
கவனமொடெழுபரி ரதகதிகுலையத்
துவனியொடெறிபடை யெதிரெதிர்தொடவே.

                   இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) அவன்விடும்-அருச்சுனன் எய்கின்ற, அடு கணை
அடையஉம் - கொல்லுகின்ற அம்புகளெல்லாமும், நொடியில் -
நொடிப்பொழுதினுள்ளே, பவனனது எதிர் சருகு என-காற்றுக்கு எதிரிலே
அகப்பட்ட சருகுகள்போல, நனி பறிய - மிகவும் மீண்டு செல்லும்படியும்,-
கவனமொடு எழுபரி - விரைந்த நடையோடு செல்லுகிற குதிரைகளைப்
பூட்டிய, ரதம் - (அருச்சுனனது) தேரினுடைய, கதி - செல்லுகை, குலைய-
கெடும்படியும்,-துவனியொடு- ஆரவாரத்துடனே, எறி படை -
பிரயோகித்தற்குரிய ஆயு