பக்கம் எண் :

218பாரதம்ஆரணிய பருவம்

154.-அருச்சுனனுடன்ஆசனத்தமர்ந்தபின் இந்திரன்
மாதலியை நோக்கிவிசயற்குற்ற போர்த்தொழிலைநீ புகல்க
எனல்.

அரிமுகக்கனகபீடத் தண்ணலையிருத்தியண்டர்
இருபுடைமருங்குநிற்ப விந்திரனிருந்தபின்னர்
மருவுபொற்றடந்தேரூரு மாதலிதன்னைநோக்கிப்
புரிசிலைவிசயற்குற்றபோர்த்தொழில்புகனீயென்றான்.

     (இ - ள்.)இந்திரன்-, அரி முகம் கனகம் பீடத்து - சிங்கத்தின்
வடிவந்தோன்றச் சித்திரித்துச் செய்யப்பட்ட பொன்மயமான ஆசனத்தில்,
அண்ணலைஇருத்தி - அருச்சுனனைவீற்றிருக்கச் செய்து,-அண்டர் -
தேவர்கள், இருபுடை மருங்குஉம் - இரண்டு பக்கங்களினிடங்களிலும், நிற்ப
- நின்றுகொண்டிருக்க, இருந்த பின்னர் - (தானும் அவ்வாசனத்தில்) உடன்
வீற்றிருந்தபின்பு,-மருவு பொன் தட தேர் ஊரும்-பொருந்திய பொன்மயமான
பெரிய தேரைச் செலுத்துகிற, மாதலிதன்னைநோக்கி - மாதலியைப் பார்த்து,
'நீ-,புரி சிலைவிசயற்கு உற்ற - கட்டமைந்த வில்லையுடைய
அருச்சுனனுக்கு நேர்ந்த, போர் தொழில் - யுத்தத் தொழிலின் விதத்தை,
புகல்-சொல்வாய்',என்றான்-என்றுசொன்னான்;

     அரிமுகப்பீடம்- சிங்காதனம்.  மருவு - யாவராலும் விரும்பப்படுகிற,
பொன் எனவுமாம்.                                        (330)

155.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:மாதலிஅருச்சுனன்
திறனைவியந்து கூற, தேவர் பலரும் அருச்சுனனுக்குப்
படைகளும் வரங்களும்உவந்து ஈதல் கூறும்.

மற்றவன்றொழுதுபோற்றிவானவர்குழுவுக்கெல்லாம்
கொற்றவவென்னாலின்றுகூறலாந்தகைமைத்தன்றால்
உற்றெதிர்மூன்றுகோடி யசுரருமுடனேசேர
இற்றதுகண்டேன்பின்னர் வில்லினாணிடியுங்கேட்டேன்.

     (இ - ள்.) அவன் - அந்த மாதலி, தொழுது - (இந்திரனை)வணங்கி,
போற்றி - துதித்து, 'வானவர்குழுவுக்கு எல்லாம் கொற்றவ-தேவர்கள்
கூட்டத்துக்கெல்லாம் அரசனே! (அருச்சுனனுக்கு நிகழ்ந்த போர்த்தொழில்),
என்னால்இன்று கூறல்ஆம் தகைமைத்து அன்று - என்னால் இப்பொழுது
சொல்லுதற்குக் கூடிய தன்மையையுடையதன்று:(ஆயினுஞ் சிறிது
சொல்லுவேன்):மூன்றுகோடி அசுரர்உம்-(தோயமாபுரத்திலுள்ள
நிவாதகவசராகிய) முக்கோடியசுரர்களும், எதிர்உற்று-(அருச்சுனனுக்கு)
எதிரிலே வந்து, உடனே-, சேர-ஒருசேர, இற்றது - அழிந்ததை, கண்டேன்-
பார்த்தேன்:பின்னர்-பின்பு, வில்லின் நாண் இடிஉம் கேட்டேன் -
(அருச்சுனனது) வில்லின் நாணியின் இடிபோன்ற ஓசையையுஞ்
செவியுற்றேன்;(எ - று.)