31.- அருச்சுனன் இமயலையைவணங்கி அங்குத் தபோவனத்து இருடியரையும் வணங்குதல். அத்திசையிமயமென்னுமரசவெற்படைந்துமிக்க பத்தியோடம்மைதன்னைப்பயந்தகுன்றென்றுபோற்றிச் சத்தியவிரதன்றம்பிதபோவனந்தோறுந்தங்கண் முத்தழல்வளர்ப்போர்பாதமுளரிகண்முடிமேற்கொண்டான். |
(இ-ள்.) சத்தியவிரதன் தம்பி - உண்மையான விரதானுஷ்டானத்தையுடைய தருமபுத்திரனது தம்பியான அருச்சுனன், அ திசை - அந்தவடக்குத்திக்கில், இமயம் என்னும் அரசவெற்பு அடைந்து - ஹிமவத்பருவதமென்கிற மலைகளுக்கெல்லாம்அரசனாகியமலையைச் சேர்ந்து, (அதனை), அம்மை தன்னை பயந்த குன்று என்று - உமாதேவியை மகளாகப் பெற்ற (பாக்கியமுடைய) மலையென்ற ஏதுவால், மிக்க பத்தியோடு - மிகுந்த பக்தியுடனே, போற்றி-வணங்கி, -தபோவனம்தோறுஉம்-தவஞ் செய்வதற்குரிய காட்டினிடங்களிலெல்லாம் (இருந்து), தங்கள் மு தழல் வளர்ப்போர் - தங்களுக்கு உரிய மூன்றுவகையான அக்கினியை (ஒமம் முதலியவற்றால்) வளர்த்துவருகின்ற முனிவர்களுடைய, பாதம் முளரிகள்-திருவடித்தாமரை மலர்களை, முடிமேல் கொண்டான் - (சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தனது) சிரசின்மேல் வைத்துக்கொண்டான்; (எ-று.) இமயம்-பனிமலை: இது மலையாரசனெனப்படும்: சிறந்ததையும் பெரியதையும் அரசனென்றல், மரபு. பத்தி-பக்தி: அது, தன்னினும் மேம்பட்டோரிடத்துச் செய்யும் அன்பு. எளியோரிடத்ததாயின் கருணையென்றும், ஒத்தோரிடத்ததாயின் பிரீதியென்றுங் கூறப்படும். அம்மை=அம்பா: தாயென்று பொருள் : அடியார்களிடத்து மிகுந்த அன்புடைமையாலும், உலகங்களுக்கு மூலகாரணமாக ஆகமங்களிற்சொல்லப்படுகின்ற பரமசிவனது சத்தி யாதலாலும், அம்மையெனப்பட்டாள். இமயமலைக்கு உரிய தெய்வம் உமாதேவியை நோக்கிப் பலகாலந் தவம்புரிந்து 'தனக்கு ஒருகால் மகளாகத்தோன்றி' என்று பிரார்த்திக்க, அவ்வேண்டுகோளை நிறை வேற்றும்பொருட்டு அம்பிகை தக்ஷன்மகளான உருவத்தை அக்கினிப் பிரவேசஞ்செய்து ஒழித்தபொழுது மலையரசனுக்கு மேனகையிடம் மகளாகத்திருவவதரித்தனனென்பது, புராணகதை. பருவதத்திமனகளாதலால், கௌரிக்குப் பார்வதியென்று பெயர். விரதங்களாவன - இன்னதருமஞ் செய்வேனெனவும், இன்னபாவஞ்செய்யா தொழிவேனெனவும் தம் ஆற்றலுக்குஏற்ப நியமித்துக்கொள்வன. சத்தியவிரதன்தம்பியென்றது-இவனும் விரதாநுஷ்டானத்தில் இளையானென்பதை விளக்கும்பொருட்டு : கருத்துடையடைகொளி. தபோவனம் - ஆச்சிரமம். முத்தழல் - ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினியென்பன. பாதமுளரிகள் - முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை. (31) 32.-அருச்சுனன்பலவகைப்பட்ட தவஞ்செய்வோரை அம்மலையிடத்துக்கண்டுமகிழ்ச்சி மிகுதல். சாரணரியக்கர்விச்சாதரர்முதற்பலருஞ்செஞ்சொ லாரணப்படியேசூழவடவிகடோறும்வைகி நாரணன்மலரோனும்பர்நாயகன்பதங்கணச்சிக் காரணத்தவஞ்செய்வோரைக்கண்டுகண்டுவகைகூர்ந்தான். |
|