நெடுந்தகை -பண்புத்தொகையன்மொழி. இலாய் - விளி. கேட்கென, அகரவீறு-தொகுத்தல். மாதுஓ-ஈற்றசை. (378) 42.-மூன்றுகவிகள்-அநுமான் வார்த்தை: அம்மலருள்ள இடம்முதலியவற்றைக் கூறுதலைத் தெரிவிக்கும். அருநிதிக்கிழவன்றன தளகைமாநகரில் மருமிகுத்தநீணமஞ்சன வாவியின்கரையில் தருமலர்ப்பெருஞ்சோலையிற்றங்குமம்மலர்சென்று உரிமையுற்றதுகோடன்மற் றும்பர்க்குமரிதால். |
(இ-ள்.)அருநிதி கிழவன்தனது அளகை மா நகரில்-அருமையான நிதிகளுக்குத் தலைவனானகுபேரனது (இராசதானியான) பெரிய அளாகபுரியிலே, மலர் தரு பெரு சோலையில்- மலர்மரங்களையுடைய பெரியதொரு சோலையிலே,மரு மிகுந்த நீள் மஞ்சனம் வாவியின் கரையில்-வாசனையைமிகவீசுகிற பெரிய நீராடுதற்குரிய தடாகத்தினது கரையிலே, அம் மலர் - அந்த அழகிய பூ, தங்கும்-பொருந்தியுள்ளது; சென்று-(அங்குப்) போய், உரிமை உற்று-சுதந்திரம்பெற்று, அது கோடல்- அம்மலரைப் பெறுதல், உம்பர்க்குஉம் அரிது - மேலுலகத்திலுள்ள தெய்வத்தன்மையுடைய தேவர்களுக்கும் அருமையானது;(எ-று.) 'பாடக்கிரமத்தினும்பொருள்கொள்ளும்முறை வலியுடைத்து'என்ற நியாயத்தை யனுசரித்து, மூன்றாமடியைமுன்னும், இரண்டாமடியை அதன்பின்னும் எடுத்துக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. வாவியின் கரை என்றது-நீர்நிலையின் நடுவரையிற் செல்ல வேண்டாவென்றற்கு. இனி, இக்கவியின் இரண்டு மூன்றாமடிகளைஉள்ளபடியே பொருள்கூறி, இம்மலர் 'கோட்டுப்பூவேயாகும்,நீர்ப்பூவன்று'என்று சாதிப்பாரு முளர். குபேரனுக்கு 'நிதிபதி'என்று வடமொழியிற் பெயராதலால், அவனை 'அருநிதிக்கிழவன்'என்றார். குபேரனது உத்தியானவனம், சைத்திரரத மெனப்படும்;அது-சாதியொருமை. மற்று, ஆல்-அசைகள். (379) 43. | ஈறிலாவிகலரக்கரோ டியக்கர்தங்காவல் கூறும்வாசகம்பொய்ப்பவர் கூர்தவமுயலும் பேறிலாதவர்பேரரு ளிலாதவர்பிறிதும் ஆறிலாதவர்தமக்குமங் கணுகுதலரிதால். |
(இ-ள்.) இகல்- வலிமையையுடைய, ஈறுஇலா - இறுதியில்லாத [மிகப்பல],அரக்கரோடு-அரக்கருடனே, இயக்கர்தம் - இயக்கருடைய, காவல் - காவலைக்கொண்ட,அங்கு - அவ்விடத்திலே,-கூறும் வாசகம் பொய்ப்பவர்-சொன்னசொல் தவறுபவர்க்கும், கூர்தவம் முயலும் பேறுஇலாதவர்-மிக்க தவத்திலே முயலுகின்ற பாக்கியமில்லாதவர்க்கும், பேர் அருள் இலாதவர் - பெருமைபெற்ற கருணையில்லாதவர்க்கும்,பிறிதுஉம் ஆறு இலாதவர் தமக்குஉம்-மற்றும் நன்னெறியிலே செல்லமாட்டாதவர்க்கும், அணுகுதல் - |