பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்27

வருணித்தார். தோன்றதோன்றும் வருணத்தையுடைய வரை எனக் கூட்டுக.
                                                         (36)

வேறு.

37.ஆசினான்ம றைப்படியு மெண்ணில் கோடி யாகமத்தின்
                    படியுமெழுத் தைந்துங் கூறிப்,
பூசினான்வ டிவமெலாம்வி பூதியாலப்பூதியினைப்
                 புரிந்தசடைப் புறத்தே சேர்த்தான்,
றேசினா லப்பொருப் பின்சிகரமேவுஞ் சிவனிவனே
                    போலுமெனத் தேவ ரெல்லாம்,
பேசினார்வரிசிலைக்கை விசயன் பூண்ட பெருந்தவத்
                   தினிலைசிலர்க்குப் பேசலாமோ.

     (இ-ள்.) (அருச்சுனன்), ஆசு இல்-குற்றமில்லாத, நால்மறை படிஉம்-
நான்கு வேதங்களிற் கூறிய விதமாகவும், எண் இல் கோடி-கணக்கில்லாத
கோடிக்கணக்காகிய, ஆகமத்தின் படிஉம்-ஆகமங்களிற் கூறிய விதமாகவும்,
எழுத்து ஐந்துஉம் கூறி-ஸ்ரீபஞ்சாக்ஷர மகாமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு,
வடிவம் எலாம்-(தன்) உடம்பு முழுவதும், விபூதியால்-திருநீற்றினால்,
பூசினான்-: அ பூதியினை-அந்த விபூதியின் மிகுதியை, புரிந்த சடை புறத்தே
கட்டியுள்ள சடையின்மேலே, சேர்த்தான்-அணிந்தான்; 'இவன்-
இவ்வருச்சுனன், தேசினால்-ஒளியினால், அ பொருப்பின் சிகரம் மேவும்
சிவன்ஏ போலும்-அந்தக் கயிலாச மலையினது
உச்சியிலெழுந்தருளியிருக்கின்ற சிவனையே போல்வான்,'என-என்று,
தேவர் எல்லாம்-தேவர்கள் யாவரும், பேசினார்-துதித்துச்சொன்னார்கள்;
வரி-கட்டமைந்த, சிலை-காண்டீவமென்னும் வில்லையேந்திய, கை-
கையையுடைய, விசயன்-அருச்சுனன், பூண்ட-(அப்போது) மேற்கொண்டு
செய்யத்தொடங்கிய, பெரு தவத்தின்-மேலான தவத்தினது, நிலை-தன்மை,
சிலர்க்கு பேசல் ஆம்ஓ-சிலரால் சொல்லுதற்கு முடியுமோ?
(முடியாதென்றபடி); (எ-று.)

     எண்ணில்கோடி என்பது - இருபத்தெட்டு ஆகமங்களின்
கிரந்தக்கணக்கையுட்கொண்டு.  விசயன் என்பதற்கு-விசேஷமான வெற்றியை
யுடையவனென்று பொருள்; ராஜசூயயாகத்திற்காக வடக்கிற்சென்று பல
அரசர்களை வென்றதனாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  சிலர்க்குப்
பேசலாமோ என்றது-பலருங்கூடி ஒருங்கு பேசினாற் பேசமுடியுமே யல்லது
தனித்தனிப் பேச முடியாதென்றபடி: அல்லது உலகத்து அறிவுடையர்
சிலராதலால், அச்சிலராலும் பேசமுடியாதென்றலுமாம்.  வடிவமெலாம்
என்றவிடத்து, எலாம் - ஒருபொருளின்பலவிடத்தைக்குறித்தது.
தேவரெல்லாம் என்றவிடத்து, எல்லாம்-எஞ்சாமைப்பொருள் குறித்தது.

     இதுமுதலாறுகவிகள்-பெரும்பாலும் முதலிரண்டு சீர்களும் ஐந்து
ஆறாஞ்சீர்களும் காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகி வந்த
எண்சீராசிரியவிருத்தங்கள்.                                   (37)