(இ-ள்.) இப்படிக்கு - இந்தவிதமாய், எதிர்த்த சேனை யாவைஉம் - (தன்னை) எதிர்த்த சேனைகள் எல்லாவற்றையும், இமைக்கும் முன்னம் - கண்ணைமுடித்திறக்கும்பொழுதினுள்ளே, துப்புடன் தொலைத்து-வலிமையுடனே கொன்று, வாயு சுகன் நின்ற-வாயுகுமாரனான வீமன் சலியாது நிலைநின்ற, உறுதி - உறுதியை, நோக்கி-பார்த்து,-மை படி வரைகள் போல்வார் - மேகங்கள்படிந்த மலைகள்போலப் பெரியகரிய வடிவமுடையவராகிய, வாள் எயிறு அரக்கர்-ஒளியையுடைய கோரதந்தங்களையுடைய இராக்கதர்கள், பின்னும் நூறாயிரர்-வேறுமொரு லக்ஷம்பேர், கை படை கொண்டு - கைகளில் ஆயுதங்களை யேந்திக்கொண்டு, ஒரு கணத்தின்-ஒரு கணப்பொழுதினுள்ளே, சூழ்ந்தார்-(வீமனைவந்து) சூழ்ந்தார்கள்; (எ-று.) இப்படிக்கு என்பதில், கு-சாரியை. இமைக்குமுன்னம்-விரைவு விளக்கும். இப்படியெதிர்ந்தசேனை என்றும் பாடம். (438) 102-அரக்கர்சூழ்ந்ததைக்கண்டு வீமன் வில்லையெடுத்து நாணியைத்தெளிதல் அவர்வெகுண்டழன்றுமேன்மேலலைகடல்போலவார்த்துப் பவர்கொண்டபனகமென்னச்சூழ்வரும்பரிசுபாராக் கவர்கொண்டதொடையலானுங்கதையொழிந்திலங்கசெங்கைத் தவர்கொண்டுநெடுநாணண்டந்தகர்தரத்தழங்கவார்த்தான். |
(இ-ள்.) அவர்-அவ்விராக்கதர்கள், வெகுண்டு அழன்று - மிகவுங் கோபித்து, மேல்மேல்-மேலேமேலே (இடைவிடாமல்), அலைகடல் போல ஆர்த்து-அலையலைக்கின்ற கடல்கள்போல ஆரவாரஞ்செய்து, பவர் கொண்ட பனகம் என்ன - நெருங்குதலைக் கொண்ட பாம்புகள்போல, சூழ்வரும் - (தன்னைச்) சூழ்ந்துவருகிற, பரிசு-விதத்தை, பாரா-பார்த்து,-கவர் கொண்ட தொடையலான்உம்- (காண்போர்மனத்தைக்) கவருந்தன்மையைக் கொண்ட (மிகஅழகிய) பூமாலையையுடைய வீமனும், கதை ஒழிந்து - கதாயுதத்தைநீங்கி, இலங்கு செம்மை-விளங்குகின்ற சிவந்த (தனது) கையிலே, அவர் கொண்டு - வில்லையேந்திக்கொண்டு, நெடு நாண் - நீண்டவில்காணியை, அண்டம் தகர்தர தழங்க-அண்டகோளங்கள் (அதிர்ச்சியாற்) பிளவுபடுமாறு முழங்கும்படி, ஆர்த்தான் - (கைவிரலால்) தெறித்து ஆரவாரித்தான்; (எ-று.) வெகுண்டு அழன்று-ஒருபொருட்பன்மொழி. பவர்என்பதைப் பவன் என்பதன் உயர்வுப்பன்மையாகக் கொண்டு, பவர்கொண்டபனகம் என்பதற்கு - சிவபிரானால் ஆபரணமாகக்கொள்ளப்பட்ட நாகங்கள் போல என்று உரைப்பாரு முளர். பனகம்-பந்நகம்; வடசொல்லிகாரம்: கால்களால் நடவாததென்றும், வளைவாகச்செல்வதென்றும் பொருளுரைப்பர்; முந்தின பொருளுக்கு பத்நக என்றும், பிந்தினபொருளுக்கு பந்நக என்றும் பிரிக்க. இனி, பல்+நகம் என்பவை புணர்ந்த பன்னகம்என்ற தொடர் விகாரப்பட்டுவந்ததாகக்கொண்டு, பலமலைகள் என்பாரு முளர். கவர் - முதனிலைத்தொழிற்பெயர். (439) |