பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்3

பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டுமென்று யாஜஉபயாஜரைக்
கொண்டு புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும்
திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றினராதலின், 'தழலெழு தையலாள்'
எனப்பட்டாள். தையலாள் - அழகுடையவள்; தையல் - அழகு. முனிவர் -
கடவுளைத்தியானஞ் செய்பவரென்றும், முக்காலத்து ஞானமுடையவரென்றும்
பொருள். காமியவனம், சரசுவதிநதி தீரத்திலுள்ளதென்பர். தௌமிய முனிவரின்
ஏவற்படி தருமபுத்திரன் சூரியபகவானைத்துதித்து அட்சயபாண்டம்பெற்றுத்
தன்னுடனிருக்கும் அந்தணர்களைப் போஷித்தா னென்பதை முதனூலா
லறிக.  ஏகாரம் - ஈற்றசை.

     இதுமுதல் மூன்று கவிகள் - ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                    (1)

2.- அவர்கள் அந்தக்காமியவனத்தின் அழகைக் காணுதல்.

ஆரமுமகிலுநாறு மருவியுஞ்சுனையுமத்த
வாரணம்பிடிகளோடு வாரிதோய்கானியாறும்
ஈரமுநிழலுங்காயுங் கனிகளும்யாவுமீண்டிக்
காரினம்பொழியுமந்தக் கானகத்தழகுகண்டார்.

     (இ-ள்.) ஆரம்உம் - சந்தனக்கட்டைகளும், அகில்உம் - அகிற்
கட்டைகளும், நாறும் - நல்மணம் வீசப்பெற்ற, அருவிஉம் -
மலையருவிகளும், சுனைஉம் - மலைச்சுனைகளும், மத்த வாரணம் - மதம்
பிடித்த ஆண்யானைகள், பிடிகளோடு - பெண்யானைகளுடனே, வாரி
தோய் - நீரில் விளையாடப்பெற்ற, கான் யாறுஉம்-காட்டாறுகளும், ஈரம்உம்
- குளிர்ச்சியும், நிழல்உம்-மரநிழல்களும், காய்உம்-காய்களும், கனிகள்உம் -
பழங்களும், யாஉம் - மற்ற எல்லாப் பொருள்களும், ஈண்டி - (தன்னிடத்தே)
பொருந்தப்பெற்று, கார் இனம் பொழியும் - மேகக்கூட்டம் மழை
பொழிவதற்கிடமான, அந்த கானகத்து - அந்தக்காமிய வனத்தினது, அழகு -
அழகை, கண்டார் - பார்த்தார்கள், (பாண்டவர்கள்); (எ-று.)

     ஆரமும் அகிலும் மலையினின்று அடித்துக்கொணரப்படுபவை.  சுனை
- நீரூற்றுள்ள மலைக்குளம்.  பிடி - யானையின் பெண் பெயர்; "பிடியென்
பெண்பெயர் யானைமேற்றே"
என்றார்,ஆசிரியர் தொல்காப்பியனார்.  காய்,
கனி - காய்ப்பது, கனிவது எனக் காரணப்பெயர்.                    (2)

3.-பாண்டவர் சென்றபின் அச்சூழல் முகில்கள்தோன்றி
விலங்குகளும் பகையற்று இமயமலைச் சாரல்போல்
அழகுபெற்றிருத்தல்.

அங்கிவர்புகுந்தபின்ன ரங்கியின்புகையுமாறிப்
பொங்கியவோமத்தீயின் புகையினான்முகிலுண்டாகச்
சிங்கமுந்துதிக்கைமாவுஞ் சேர்ந்துடன்றிரியச்சூழல்
எங்கணுமழகுபெற்ற திமகிரிச்சாரல்போன்றே.