12. | தண்டரளமாதிநவ ரத்நவொளிதானே எண்டிசைவிளக்கும்வரை யின்புதுமையெல்லாம் கண்டுவகைகொண்டு நனிகண்ணிணைகளித்தான் புண்டரிகவாணிருத னைப்பொருதழித்தான். |
(இ-ள்.)(இவ்வாறு), தண் தரளம் ஆதி நவ ரத்நம் ஒளி தான்ஏ எண்திசை விளக்கும் வரையின் புதுமை எல்லாம்-குளிர்ச்சியான (ஒளியையுடைய) முத்து முதலிய ஒன்பதுவகையிரத்தினங்களினொளியே (சென்று) எட்டுத்திசைகளையும்விளங்கச்செய்விக்கப்பெற்ற அவ்விரத்தினகிரியினது அதிசயங்களையெல்லாம்,வாள் புண்டரிகன் நிருதனைபொருது அழித்தான் - கொடிய புண்டரீகனென்னும் இராக்கதனை முன்னேபோர்செய்துகொன்றவனானவீமன், கண்டு - பார்த்து, உவகை கொண்டு-மகிழ்ச்சிபெற்று, கண் இணைநனி களித்தான் - (தனது) இரண்டுகண்களும் மிகக்களிக்கப்பெற்றான்;(எ-று.) இக்கவியின்முதலிரண்டடிகளால், இரத்தினகிரி யென்பது - இரத்தினங்களைமிகுதியாகவுடைய தென ஏதுப்பெயராமாறு உணர்த்தப்பட்டது. புண்டரிக னென்னும் உயர்திணைப்பெயரின் ஈறுகெட்டது. புண்டரிகன் - புண்டரீகன் என்பதன் குறுக்கல். நவரத்நம் - முத்து, வைடூரியம், வைரம், கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம் என்பன. (514) 13.-வீமன்அந்தக்கிரியினின்று அளகாபுரியின் வாயில்களைக்கடந்து அதற்கு வடமேற்றிசையில் நிற்றல். அக்கிரியினின்றுமிழி வுற்றளவில்செல்வம் மிக்கவளகேசனகர் வெய்தின்விரைவெய்தித் தொக்கமணிவாயிலொரு நாலுமொருதானே புக்குவடமேற்றிசையி னின்றிதுபுரிந்தான். |
(இ-ள்.)(பின்பு), அ கிரியினின்றும் இழிவுற்று - அந்த இரத்தின மலையினின்றும்இறங்கி, அளவு இல் செல்வம் மிக்க அளகேசன் நகர்- வரையறையில்லாத ஐசுவரியம் மிகுந்த குபேரனது அளகா பட்டணத்தை, வெய்தின் விரைவு எய்தி - உக்கிரமான வேகத்துடனே யடைந்து, தொக்க மணி வாயில் ஒரு நால்உம் ஒரு தானே புக்கு - நெருங்கியுள்ள இரத்தினங்களைப்பதித்த(அந்நகரத்தின்) வாயில்கள் நான்கிலும் தானொருவனாகவேபிரவேசித்து[நான்குவாயில்களையுங்கடந்துஎன்றபடி], வடமேல் திசையில் நின்று - (அந்நகரத்தின்) வடமேற்குப்பக்கத்தில் நின்றுகொண்டு, இது புரிந்தான் - இதனைச்செய்தான்;(எ-று.)அத்தொழில் இன்னதென மேற்கவியில் விளங்கும். (515) |