மௌலியை - திருமுடியையுடையவனும்,கரு மயில் பாகனை - கருமையான மயில்போலுஞ்சாயலையுடையஉமாதேவியை இடப்பக்கத்திற்கொண்டவனுமாகிய பரமசிவனை, காண்டல்-(பிரதியக்ஷமாகத்) தரிசித்தலை, வேண்டிய-விரும்பின, திருமகன்-(தனது) சிறந்த குமாரனான அருச்சுனனது, தவம்-தவத்தினது, நிலை - நிலைமையை, குருவுடன் - (தனது) ஆசாரியராகிய பிரகஸ்பதிபகவானுடனே, கூறி - சொல்லி, விரகு உற - தந்திரமாக, தெரிய - (அதனைப்) பரிசோதிக்கும்படி, உன்னினான்- எண்ணினான் (இந்திரன்); (எ-று.) குருஎன்ற வடசொல்லுக்கு - அஜ்ஞாநமாகிய இருளைப்போக்கு பவனென்பது, அவயவப்பொருள். மாலைமௌலி, கருமயில் - அன்மொழித்தொகைகள், தவநிலையென்பது, கூறி தெரிய என்ற இரண்டுக்குஞ் செயப்படுபொருளாம். பிருங்கியென்னும் மகாமுனிவன் பரமசிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யக்கண்ட பார்வதீதேவி, தன்பதியை நோக்கி 'முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு ஏது என்ன?' என்று வினவ, உருத்திரமூர்த்தி 'இஷ்டசித்திபெற விரும்புபவர் உன்னையும், மோக்ஷம் பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்' என்ன, அதுகேட்ட தேவி பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம்பெற்றாளென்பது, வரலாறு. (47) 48.-இந்திரனது உள்ளத்தில் நிகழும் ஆலோசனை. அரும்பகைவலிமையா லவுணரூர்சுடும் பெரும்பிறையணிசடைப் பிஞ்ஞகன்றனது இரும்பகழிகள்பெற வெண்ணியேகொலாம் விரும்பியதித்தவம் வில்வலானரோ. |
(இ-ள்.) வில் வலான்-விற்போர்த்தொழிலில் வல்லவனாகிய அருச்சுனன், இ தவம்-இப்படிப்பட்ட (அரிய) தவத்தை, விரும்பியது-(செய்ய) விரும்பினது, அரு பகை-(போக்குவதற்கு) அருமையான பகைமையினாலும், வலிமையால் - வல்லமையினாலும், அவுணர் ஊர் சுடும்-அசுரர்களது திரிபுரத்தை யெரித்த, பெரு பிறை அணி சடை-பெருமையையுடைய இளஞ்சந்திரனைத் தரித்த ஜடையையுடைய, பிஞ்ஞகன்தனது-பரமசிவனது, இரும் பகழிகள்-பெரிய (பாசுபதாஸ்திரம்முதலிய) பாணங்களை, பெற-(தான்) பெறுதற்கு, எண்ணிஏ கொல்ஆம்-விரும்பியே போலும்; (எ-று.)-அரோ- ஈற்றசை. இனி, முதலடிக்கு-தேவர்முதலியோர்க்கு அழித்தற்கு அரிய பகையாகிய அசுரரது ஊரைத் தனது வலிமையாற் சுட்ட எனப் பொருளுரைத்தல், சிறப்பு. சுடும்-காலவழுவமைதி. பெருஞ்சடை என இயைத்தல் நேர். பிஞ்ஞகன் என்பதற்கு-அழிக்குங் கடவுள் என்று ஒரு சாராரும், பிஞ்ஞகம் என்பது தலைக்கோலமாதலால் |