102.-குபேரன்தருமனைநோக்கிக்கூறியமுகமன். அத்தினபுரிதனக் கதிபநீவர இத்தினமென்றவப் பயனிருந்தவா நித்தனையெனதுயிர்நேயநண்பினால் ஒத்தனையெனவிவையுரைசெய்தானரோ. |
(இ-ள்.)'அத்தினபுரிதனக்குஅதிப - அஸ்தினாபுரிக்குஅரசனே! [தருமனே!]இ தினம் - இன்றையதினத்தில், நீ வர - நீ (இங்கே) வரும்படி, என் தவம் பயன் இருந்த ஆ(று) - எனதுதவத்தின்பயன் இருந்தவிதம் (வியக்கத்தக்கது)! எனது உயிர் நேயம் நண்பினால்- என்னுடைய உயிரோடொத்த அன்புள்ளசிநேகத்தால், நித்தனைஒத்தனை- அழிவில்லாத சிவபிரானையொத்தாய்,'என - என்று, இவை - இவ்வார்த்தைகளை,உரை செய்தான் -(குபேரன் தருமனைநோக்கிக்) கூறினான்;(எ-று.) ஆ -விகாரம். சிவபிரான் முன் எனக்கு நண்பானதுபோல, இப்போது நீயும் நண்பனானாயென்பதுகருத்து. நித்தன் - நித்யன். வேறு. 103.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: குபேரன் அருச்சுனன்செய்தியைக்கூறி, தருமபுத்திரனுக்குத் தாமரைமலருடன்விடையுங்கொடுத்தனுப்புதல். நெருந லிந்திரபு லிந்திரனும் யாமு நீடவையி ருந்தபின்பு, உருநலந்திகழும் விசய னென்னவவ ணொருவனெய்துதலு மவனையித், திருநலம்புதிய செம்மல் யாவனென மற்ற வன்செயலும் வெற் றியும், குருகுலம்பெறுகு லேச னென்பதுவு நின்ற வானவர்கள் கூறினார். |
(இ-ள்.)நெருநல்-நேற்று, இந்திர புரத்தில் - தேவேந்திரனுடைய அமராவதிபட்டணத்திலே, நீடு அவை - பெரிய (சுதர்மையென்னுஞ்) சபையிலே, இந்திரன்உம் - தேவேந்திரனும், யாமஉம் - நாமும், இருந்த பின்பு-வீற்றிருந்தபின்னர், உரு நலம் திகழும்-வடிவத்தின் அழகு விளங்குகிற, விசயன் என்ன - அருச்சுன னென்று, ஒருவன் - ஒருமனிதன், அவண் - அவ்விடத்தில், எய்துதலும் - வந்தவளவிலே,-அவனை- அவனைக்குறித்து,திரு நலம் புதிய இ செம்மல் யாவன் என - 'அழகின் பெருமையையுடைய புதியவனாகியஇவ்வாண்மகன் யாரோ?'என்று(யான்) வினாவ,நின்ற வானவர்கள்-அங்குநின்ற தேவர்கள், அவன் செயல்உம் - அவனுடைய செய்கைகளையும், வெற்றிஉம்-(அவனது) சயத்தையும், குரு குலம் பெறு குல ஈசன் என்பதுஉம் - குருவமிசம் பெற்ற அக்குலத்துத்தலைவனிவனென்பதையும், கூறினார்- சொன்னார்கள்; (எ-று.) செம்மல் -ஆண்பாற்சிறப்புப்பெயர். மற்று-அசை. நெருநல் - இறந்தகாலங் குறிப்பதொர் இடைச்சொல். வெற்றி - நிவாதகவசர் |