பக்கம் எண் :

10பாரதம்உத்தியோக பருவம்

சாத்தகி பலராமனைப் பழித்தல்.

4.இளையசாத்தகிதமையனை மிகக்கரிதிதயமாயினுநாவில்
விளையுமாற்றநின்றிருவடிவினுமிகவெள்ளையாகியதென்ன
வுளையவார்த்தைகளுரைத்தனனுரைத்தலுமுற்றவரிடுக்கண்கள்
களையுமாப்புயலிருவருமொழிமினுங்கட்டுரையினியென்றான்.

     (இ -ள்.) (உடனே), இளைய சாத்தகி - (பலராமகிருஷ்ணர்களுக்கு)
இளையவனான சாத்தகியென்பவன், தமையனை - (தனது பெரிய) தமையனான
பலராமனை, (நோக்கி), 'இதயம் மிக கரிது ஆயினும் - (உனது) மனம் மிகவும்
கருமையுடையதானாலும், நாவில் விளையும் மாற்றம்-(உனது) நாக்கினிடத்து
உண்டாகின்ற வார்த்தை, நின் திருவடிவினும் மிக வெள்ளை ஆகியது - உனது
அழகிய உடம்பைக்காட்டிலும் மிக வெளுத்ததாயிருந்தது,' என்ன-என்று,
உளைய - (பலராமனது மனம்) வருந்தும்படி, வார்த்தைகள் உரைத்தனன் -
பரிகாச வார்த்தைகளைச் சொன்னான்; உரைத்தலும் - (அங்ஙனஞ்)
சொன்னவளவிலே, உற்றவர் இடுக்கண்கள் களையும் மா புயல் - (தன்னைச்)
சரணமடைந்தவரது துன்பங்களை ஒழித்தருளுகிற சிறந்த காளமேகம் போன்ற
கண்ணபிரான், இனி இருவரும் நும் கட்டுரை ஒழிமின் என்றான் - 'இப்பொழுது
நீங்களிரண்டு பேரும் உங்களுடைய உறுதிமொழிகளை ஒழியுங்கள்' என்று
சொன்னான்; (எ - று.)

    'இதயம் கரிதாயினும் மாற்றம் வடிவினும் வெள்ளையாகியது' என்றதனால்
மனமாகிய அகமும், மொழிமெய்களாகிய புறமும் ஒற்றுமைப்பட்டிராது
வேறுபட்டிருப்பதெனப் பழித்தவாறு.  திரிகரணங்கள் பேதப்பட்டிருப்பது
உத்தமர்க்கு உரியதன்று.  இதயம் மிகக்கரிது என்பதற்கு - மனம் மிகக்
களங்கமுடையதென்றும், நீதி அநீதிகளை நடுவுநிலைமையாக உணருந் தெளிவு
இல்லாத குற்றமுடையதென்றும், கருத்து.  கருமை யென்பது இருளென்ற
பொருளாய் அறியாமை மேல் நிற்பதை "புறங்குன்றி கண்டனையரேனும்
அகங்குன்றி, மூக்கிற்கரியா ருடைத்து" எனத் திருக்குறளிலுங் காண்க.  மாற்றம்
மிக வெள்ளையாகியது என்றது - சொல் சிறிதும் சாரமற்றது என்று கருத்து.
வெண்மை என்பது - சாரமின்மை யென்னும் பொருளதாய் அறிவு முதிராமை
மேல் நிற்பதை "வெண்மை யெனப்படுவதியாதெனி னொண்மை, யுடையம்யா
மென்னுஞ் செருக்கு" எனத் திருக்குறளிலும், "வெள்ளைமை கலந்த நோக்கின்"
எனச் சீவகசிந்தாமணியிலும், "வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்"
"வெள்ளியையாதல் விளம்பினை" எனக் கம்பராமாயணத்திலும் காண்க.
இங்கே, உற்றவரிடுக்கண்கள்களையும் மாப்புயல் என்றது - தன்னைச் சேர்ந்த
பாண்டவர்களின் ஆபத்துகளைக் கண்ணன் பலவகையிலுந் தீர்த்தருளுதலால்;
இனி, உற்றவர் என்ற சொல்லுக்கு உறவினரென்ற பொருளும் உள்ளதாதலால்,
தனது தமையன் தம்பிமார்களுக்கு நேர்ந்த மனஸ்தாபத்தை மத்தியஸ்தராய்
நடுநின்று தீர்த்தல்பற்றி, 'உற்றவரிடுக்கண்கள் களையு மாப்புயல்'
என்றதெனவுங் கொள்ளலாம், உம் கட்டுரை என்றும் பிரிக்கலாம்.