ஊர்வசியைஅசுரர்கள் கவர்ந்து செல்கையில், அவள் முறையிட்டதைக் கேட்டு, இந்திரனுக்கு வருகிற மானக்கேட்டை ஒழிக்கக் கருதி, உடனே தேரேறிச் சென்று பொருது அசுரர்களை வென்று அவளை மீட்டுவந்து, பின்பு இந்திரன் தூதனுப்பியதனால் அவளை மணஞ் செய்துகொண்டு, அவளிடத்தில் ஆயுவென்னுங் குமாரனைப் பெற்றானென்பது கீழ்க்குருகுலச்சருக்கத்துக் கதை. இங்ஙனம் தனக்கு யாதொரு சம்பந்தமுமில்லாத தேவதாசியை அத்தேவர்க்குப் பகைவரான அசுரர் பங்கப்படுத்த முயல்வதைப்பார்த்து மனம் பொறாமல் இந்திரனுக்கு உபகாரமாக அக்கொடியவரை வென்று அவளை அவர்களினின்றுமீட்டு அவளது துன்பத்தைத் தீர்த்தருளிய பெருங்கண்ணோட்டமுடைய புரூரவ சக்கரவர்த்தியினது மரபிற் பிறந்த நாம், அக்கினிசாட்சியாகப் பலருமறிய விரும்பி மணம்புரிந்த மனைவியைப் பங்காளிகள் பலருமறியச் சபையிலே பிடித்திழுத்துத் துகிலுரிந்து பங்கப்படுத்தியதைப் பார்த்தும் சிறிதும் மானமின்றி அவர்களை யழித்து அவளது துன்பத்தைத் தீர்க்கச் சிறிதும் முயலாமல் அவர்கள் கீழேயேயிருந்து இரந்து இராச்சியம்பெற்று ஆண்டு உண்டு வயிறுவளர்த்து வாழத்துணிவது தகுதியோ? எனத் தருமனது அளவுகடந்த பொறுமையை இகழ்ந்து கூறியவாறு. நடை -தொழிற்பெயர்; ஐ - விகுதி: நட என்னும் பகுதியீறு தொகுத்தல் விகாரம். அரம்பை - ரம்பா; இந்த ஒருதேவமாதின் சிறப்புப்பெயர் எல்லாத் தேவமகளிர்க்கும் பொதுப்பெயராக வழங்கி, பின்பு இங்கே சிறப்பாய் ஊர்வசியைக் குறித்தது. இமையோர் - கண்ணிமையாதவர்; எதிர்மறைவினையாலணையும் பெயர்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது. விகுதியீற்றயலாகாரம் ஓகாரமாயிற்று: இனி, இமையில் (மூடாமையாகிய) விசேஷ முடையவர் என உடன்பாடாகப் பொருளுரைப்பினும் அமையும். இமையோரரசு - தேவராசன். முதல்வன் - ஆதிபுருஷன். மடவரல் - ஆறாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை: இங்கே மடமை - பெண்மைக் குணங்களுள் ஒன்றாய், அது - நாணம் அச்சம் பயிர்ப்பு முதலிய மற்றைக் குணங்களுக்கும் உபலக்ஷணமுமாகலாம். வலியோன் - அன்பின்றித் தீமைசெய்ய அஞ்சாத கன்னெஞ்சுடையா னென்றபடி. 'உலகு' என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் - பொருளால் உயர்திணைப் பன்மை குறிப்பினும், சொல்நிலைக்கேற்ப, 'சொலாது' என்னும் அஃறிணை யொருமைமுற்றைக் கொண்டது. (88) 29. | கானெறிபோய்க் கரந்துறைந்து கடவநாள்கழித்ததற்பின் கானநீங்கி, யீனமிலா வகைவந்தார் நந்துணைவரெனச் சிறிது மிரங்கானாகின், மாநகரும் வளநாடு முரிமையுந்தன்மொழிப்படியே வழங்கானாகிற், றானறியாதவன் பிறர்போய்க் கற்பித்தா லறிவனோ தரணி வேந்தே. |
(இ - ள்.) தரணி வேந்தே - நிலவுலகத்தை ஆளும் அரசனே!- (துரியோதனன்), - 'நம் துணைவர் - நமது உடன்பிறந்தவர் [பாண்டவர்], கான் நெறி போய் - (பன்னிரண்டு வருஷகாலம்) காட்டுவழியிற் |