உறுதியாகத்தியானித்தான் என்பதாம். பதினாறாயிரம் கோபஸ்திரீக ளோடும் பதினாறாயிரம் இராஜ கன்னிகைகளோடும் தனித்தனி சேர்தற்கு இவ்வவதாரத்தில் திருமாலுக்குப் பதினாறாயிரம் வடிவும் அமைந்ததாதலால் 'ஆயவடிவு பதினாறாயிரம்' என்றார். ("பத்துடையடியவர்க் கெளியவன்" என வைஷ்ணவத்திலும், "பத்திவலையுட்படுவோன்" எனச் சைவத்திலும் அடியார்கள் அருளிச்செய்தபடி) கடவுள் அன்புக்கு வசப்பட்டவராதலால், கருத்தினாற் பிணிக்கலாம்படியாயிற்று. 'பிணித்தான்' என்ற வினையினால், கருத்தைக் கயிறாகக் கொள்க; இஃது ஏகதேசவுருவகத்தின்பாற்படும். ஆய-ஒன்றையொன்று ஒத்ததாகிய என்பாரு முளர். ஆய = ஆகிய. மாயவனும், தூயவனும் என்ற உம்மைகள் எச்சப்பொருளன. அன்பன் - பக்தன். அறிவான் - சோதித்தற்கு; வானீற்று எதிர் காலவினையெச்சம். 'மூலமாந்தோற்றம்' என்றது - அக்கடவுளின் நிஜவடிவத்தை. தோற்றம் - தோன்றுதலுடையது; தொழிலாகுபெயரென்றாவது, அம் - கருத்தாப்பொருள்விகுதி யென்றாவது கொள்க. தாய = தாவிய. உலகந் தாய கதை:-மகாபலி யென்னும் அசுரராசன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையுஞ் சயித்து மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக் கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட, அவன், குள்ளவடிவமான வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவர்க்கு அதிதிதேவியினிடம் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத் தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தத்தஞ் செய்த நீரைக் கையில் ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து, மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம். ஒரு பாதத்தால் மண்ணுலகத்தை அளந்ததிலே அதன்கீழுள்ள உலகங்களேழும் அடங்குதலாலும், மற்றோரடியால் விண்ணுலகத்தை யளந்ததிலே புவர்லோகம் முதலிய மேலுலகங்களாறும் அடங்குதலாலும், 'எவ்வுலகுந் தாய அடியிணைகள்' எனப்பட்டன. (97) 38.- கண்ணன் சகதேவனுக்குப்பிரதியக்ஷமாகக் காட்சிகொடுத்தல். நீதேவ னென்றறிந்துநெஞ்சாற் றனைக்கட்டுஞ் சாதேவன் கண்களிக்கத்தானேயாய் முன்னின்றான் பூதேவருங் கனகப் பூங்காநிழல்வைகு மாதேவருந் தேடிக் காணாமலரடியோன். |
(இ -ள்.) பூ தேவரும் - பூமியில் வசிக்குந் தேவர்களாகிற அந்தணர்களும், கனகம் பூ கா நிழல் வைகும் மா தேவரும் - பொன்மயமான அழகிய கற்பகச்சோலையின் நிழலிலே வசிக்கிற சிறந்த தேவர்களும், |