தேடி காணா -தேடியும் பார்க்கமுடியாத, மலர் அடியோன் - தாமரை மலர்போன்ற திருவடிகளையுடையவனான கண்ணபிரான்,- நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் சாதேவன் கண்களிக்க - 'நீயே கடவுளாவாய்' என்று (தனது சொரூபத்தை) உணர்ந்து மனத்தினாலே தன்னைக் கட்டின சகதேவன் கண்ணாற்கண்டு களிக்கும்படி, தானே ஆய் முன் நின்றான் மற்றை யுருவங்களை யெல்லாம் மறைத்து (அவற்றிற்குக் காரணமானதும் சகதேவனாற் கருதப்பட்டதுமான) தனது நிஜரூபமேயாய் அவனெதிரில் (காட்சிகொடுத்து) நின்றருளினான்; (எ - று.) "பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்" என்ற இரண்டு தன்மைகளும் இச்செய்யுளால் நன்கு விளக்கப்பட்டன. தேவன் என்றசொல்லுக்கு விளங்குபவ னென்றும், வானுலகத்தவ னென்றும் பொருள். கனகப்பூங்கா - பொன்மயமான பூக்களையுடைய சோலை யென்றுமாம். தேவர்கள் விண்ணுலகத்திற் பஞ்சதருக்களின் நிழலில் வசித்தல், "இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடை துளிக்கு நிழலிருக்கை" எனக் கம்பராமாயணத்திற் கூறியதனாலும் விளங்கும்; அது பற்றியே, 'காநிழல் வைகும் மாதேவர்' என்றது. பொன்னுலகத்திலுள்ள எல்லாப் பொருளும் பொன்மயமானவை யாதலால்,'கனகப்பூங்கா' எனப்பட்டது. காக்கப்பட்டது கா என்று செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர். பூதேவர் - பூமியில் தேவர் போலச்சிறப்புப்பெற்று விளங்குபவர். "நிலத்தேவர்" என்றார் ஆழ்வாரும். இங்கே,'பூதேவரும் மாதேவரும் தேடிக்காணாத அடி' என்றது- அன்புநிலையிற்குறைவுபட்டார்க்கு அகப்படாத தன்மையை. கடவுளையறிதற்கு இடமும்சாதியும் குலமும் முதலியன காரணமல்ல, மனத்தூய்மையே காரணம் என்பதுஇதில் விளங்கும். மலரடி - உவமத்தொகை. வினைத்தொகையாய்,(திரிவிக்கிரமாவதார காலத்தில் உலகமெங்கும்) பரந்த திருவடி யெனினுமாம். திருமாலின் அம்சாவதாரமான கண்ணபிரான் சகதேவனது பக்தியைஉணர்ந்திருந்தும் இவ்வாறு பரீட்சித்தது- அதனைத் தான் அனுபவித்துக்களிக்கவும், இச்சகதேவனுக்கு ஓர் சிறப்பை வெளிப்படுத்தவும் என்க. (98) 39.-கண்ணன் 'என்காலைவிடுக' என்று சொல்ல, சகதேவன் வரம் வேண்டுதல். அன்பாலின் றென்னையறிந்தே பிணித்தமைநன்று என்பா தந்தன்னை யினிவிடுகவென்றுரைப்ப வன்பார தப்போரில்வந்தடைந்தே மைவரையும் நின்பார்வை யாற்காக்கவேண்டு நெடுமாலே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) (கண்ணன் சகதேவனை நோக்கி), - 'அன்பால் இன்று என்னை அறிந்து பிணித்தமை நன்று - பக்தியினால் இப்பொழுது எனது சொரூபத்தை (நீ) உணர்ந்து கட்டியது நன்றாகவுள்ளது, |