பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 125

அழைத்தது,இங்ஙனம் வருந்தும் தன் குறையையும் தீர்த்தருள வேண்டுமென்ற
குறிப்பு.

     மூலப்பேர் - மூலமாகிய பேர் எனப் பொதுப்பெயரும் சிறப்புப்
பெயருமாகத் தொடர்ந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக விரிக்க.
நீலக்கிரி - நிறத்துக்கும், அழகுக்கும், சலியாத திண்மைக்கும், அளவிடப்படாத
பெருமைக்கும் உவமை.  முன் - இடமுன்.  மும்மதம் - கன்னமிரண்டு,
குறியொன்று இவற்றிற் சொரிவது.  கநகம் - ஸ்வர்ணம்; ஹிரண்யன் என்ற
பெயர் பொன்னிறமானவனென்பதுபற்றிய தாதலால், அதன் பரியாயநாமமாக
'கனகன்' என்றார்.                                          (103)

44.

கற்றைக் குழல்பிடித்துக்கண்ணிலான் பெற்றெடுத்தோன்
பற்றித் துகிலுரியப்பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித்திகிரிக்கோவிந்தா நீயன்றி
யற்றைக்கு மென்மானமார்வேறு காத்தாரே.

     (இ -ள்.) கொற்றம் - வெற்றியையுடைய, தனி - ஒப்பில்லாத, திகிரி -
சக்கரத்தையுடைய, கோவிந்தா - கண்ணபிரானே!- கண் இலான் பெற்று
எடுத்தோன் - குருடனான திருதராட்டிரன் பெற்று வளர்த்த துச்சாதனன்,
கற்றை குழல் பிடித்து - தொகுதியான (எனது) கூந்தலைப் பிடித்து இழுத்து
(வந்து), துகில் பற்றி உரிய - (எனது) ஆடையைப் பிடித்து அவிழ்க்கையில்,
பாண்டவரும் பார்த்து இருந்தார் - (என் கொழுநரான) இப்பாண்டவர் ஐவரும்
பார்த்துக்கொண்டு (யாதொரு பரிகாரமுஞ் செய்யாமற் சபையிற் சும்மா)
இருந்தார்கள்; அற்றைக்கும் - அக்காலத்திலும், என் மானம் நீ அன்றி வேறு
ஆர் காத்தார் - எனது மானத்தை நீ யல்லாமல் வேறே யார்தாம் காத்தவர்?
[எவருமில்லை யென்றபடி]; (எ - று.)

    பிறர்க்கு உதவியதைக் கீழ்ச் செய்யுளாற் கூறி, தனக்கு முன்பு உதவியதை
இச் செய்யுளாற் கூறுகிறாள்.  'ஆபத்து நேர்ந்த காலத்தில் மகளிர்க்குத் தம்தம்
கணவர் குறைநீக்குவார்கள்; எனக்கோ கணவர் ஒருவர்க்கு ஐவராயிருந்தும்,
ஆபத்துக்காலத்தில் உதவுமாறு இல்லை, என்பது முன்னமே நடந்த
வரலாற்றால் விளங்குவதால், இப்பொழுது நீ காப்பாற்றினா லுண்டு;
இல்லாவிட்டால் இல்லை; எனது சாபத்தையும் சபதத்தையும் நிறைவேறச்
செய்து எனது மானத்தைக் காக்கவேண்டுவது உனது பாரமே' என்று குறை
வேண்டினளென்பதாம்.  பாண்டவரும், உம்மை - உயர்வு சிறப்பு;
அப்பாண்டவர்கள் மானத்தைக் காக்கவேண்டிய உரிமையும் புயவலிமையும்
உடையாரென்ற பொருளைத் தரும்.  அற்றை - அன்று என்னும் மென்றொடர்
வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.  அற்றைக்கும், உம்மை - எதிரது
தழுவியது.                                                 (104)

45.

மன்றி லழைத்தெனக்குமாசளித்த மன்னவன்பாற்
சென்று தமக்கைந்தூர்திறல்வீரர் பெற்றிருந்தால்
அன்று விரித்தவருங்கூந்தல் வல்வினையேன்
என்று முடிப்பதினியெம்பெருமா னென்றழுதாள்.