மூவரையும்,'அடங்காதோர், கன்று சினமனத்தோர், இளையோர்' என்ற சொற்களாற் சிறிது இகழ்ந்ததாகவுங் கொள்ளலாம். எய்த என்ற செயவெனெச்சத்தி னீற்றில், இழிவுசிறப்புப்பொருளுள்ள எச்சவும்மை, விகாரத்தால் தொக்கது. இதனால் அவர்கள் வரவுந் தகாதவர், ஆலோசனை சொல்லவுந் தகாதவ ரென்றவாறு. (112) 53.-தருமபுத்திரன்வேண்டுகோளினால் கண்ணன் தூதுசெல்லத் தேரேறுதல். என்னக் கழறி யிருந்தோருரைதவிர்த்து நின்னொப் பவரில்லாய்நீயேகென வுரைப்ப மன்னர்க்கு மன்னவன்பான்மாயோனுந் தூதாகிப் பொன்னுற்ற நேமிப்பொருபரித்தேர் மேற்கொண்டான். |
(இ -ள்.) (யுதிட்டிரன்),- என்ன கழறி - என்று உறுத்திக்கூறி, இருந்தோர் உரை தவிர்த்து - (மற்றும் அங்கு) இருந்த (வீமன் அருச்சுனன் நகுலன் சாத்தகி) என்பவரது பேச்சுக்களையும் அடக்கி, (கண்ணனை நோக்கி),- 'நின் ஒப்பவர் இல்லாய் - உன்னை யொப்பவர் (எவரையும்) பெறாதவனே! நீ ஏகு - நீ தூது செல்வாய்,' என உரைப்ப - என்று சொல்ல, மாயோனும் - கண்ணபிரானும், மன்னர்க்கு மன்னவன்பால் - அரசர்கட்கு அரசனான துரியோதனனிடத்து, (செல்லுதற்கு உரிய), தூது ஆகி - தூதுவனாய், பொன் உற்ற நேமிபொரு பரி தேர் மேற்கொண்டான் - பொன்னினாலமைந்த சக்கரங்களையுடை யதும் போர்செய்தற்கு உரிய குதிரைகளைப் பூட்டியதுமாகிய (தனது) இரதத்தின்மீது ஏறியருளினான்; (எ - று.) கழறி,தவிர்த்து, உரைப்ப என்ற வினைகளுக்கு இடத்திற்கு ஏற்பத் தருமனென்னத் தோன்றா எழுவாய் வருவித்து முடிக்க. ஒப்பவரில்லாமை கூறவே, உயர்பவரில்லாமை தானே விளங்கும்; "தனக்குவமையில்லாதான்" என்பது திருக்குறள்; "தன்னொப்பாரில்லப்பன்" "ஒத்தாரை மிக்காரை யிலையாய மாமாயா" என்றார் ஆழ்வாரும். நின் ஒப்பவரில்லாய் - உனக்கு நீயே சமானமானவ னென்றபடி; 'ராஜராஜன்' என்று துரியோதனனுக்கு ஒரு பெயர் நேமித்தேர், பரித்தேர் எனத் தனித்தனி இயையும். (113) 54.-இதுவும், மேற்கவியும் -குளகம்: கண்ணன் சென்று அத்தினாபுரியைக் காணுதலைக் கூறும். சங்கு மணிமுரசுஞ் சல்லரியுந்தாரைகளும் எங்கு முழங்க வெழில்வெண்குடைநிழற்றப் பொங்கு கவரி புடையிரட்டவெண்ணிலா வங்க மொருநான்கு மவனிபருந்தற்சூழ. |
(இ -ள்.) (கண்ணன் தேர்மேலேறிப் புறப்படுகையில்), சங்கும் - சங்குகளும், அணி முரசும் - அழகிய பேரிகைகளும், சல்லரியும் - சல்லரியென்னும் வாத்திய விசேஷங்களும், தாரைகளும் - தாரை |