பக்கம் எண் :

136பாரதம்உத்தியோக பருவம்

யென்னும் ஊதுகருவிகளும், எங்கும் முழங்க - எல்லாவிடங்களிலும் மிக
ஒலிக்கவும், எழில் வெள்குடை - அழகிய வெண்கொற்றக்குடை, நிழற்ற -
நிழலைச் செய்யவும், பொங்கு கவரி - விளங்குகின்ற சாமரங்கள், புடை இரட்ட
- பக்கங்களில் வீசவும், எண் இலா - கணக்கில்லாத, அங்கம் ஒரு நான்கும் -
(ரதகஜதுரகபதாதி யென்னுஞ்) சதுரங்க சேனைகளும், அவனிபரும் - அரசர்கள்
பலரும், தன்சூழ - தன்னைச்சுற்றிலும் வரவும், (எ - று.)- 'சென்றருளி,
கண்டான்' என மேற்கவியோடு தொடரும்.

    முரசொலியுஞ் சங்கொலியு மூரித்தேர்த்தானை, திரைசெய்
கருங்கடல்போற் செல்ல' என்றார் பெருந்தேவனாரும்.  முழங்க, நிழற்ற,
இரட்ட, சூழ இந்நான்கு செயவெனெச்சங்களும் - உம்மைகள் தொக்கு
நின்றதனால், வினைச்செவ்வெண்.  கவரி - சமரீ என்பதன் திரிபு;
இப்பெண்மானின் பெயர் அதன் வால்மயிரினாற் செய்யப்பட்ட
இராசசின்னத்துக்கு இருமடியாகுபெயர்.  தாரை - சிறுசின்னமெனப்படும். (114)

55.

கல்வரையும் பாலைக்கடுஞ்சுரமுங் கான்யாறும்
நல்வரையு நீர்நாடுநாளிரண்டிற் சென்றருளித்
தொல்வரைய கோபுரமுநீண்மதிலுஞ் சூழ்ந்திலங்கு
மல்வரைய தோளான்வளமாநகர் கண்டான்.

     (இ -ள்.) (கண்ணன்),- கல் வரையும் - கற்களடர்ந்த மலைகளையும்
[குறிஞ்சி நிலத்தையும்,] பாலை கடுஞ் சுரமும் - பாலை நிலமாகிய கொடிய
வெப்பங்கொண்ட இடத்தையும், கான் யாறும் - காட்டாறுகளையும் [முல்லை
நிலத்தையும்], நல் வரையும் நீர் நாடும் - நன்மையைத் தம்மிடத்தே கொண்ட
நீர்வளமுள்ள நாடுகளையும் [மருத நிலத்தையும்], நாள் இரண்டில் சென்று
அருளி - இரண்டுநாளிற் போய்க் கடந்தருளி,- (மூன்றாம் நாளில்),-
தொல்வரைய கோபுரமும் - பழமையான நிலைகளையுடைய கோபுரங்களாலும்,
நீள் மதிலும் - உயர்ந்த மதில்களாலும், சூழ்ந்து - சூழப்பட்டு, இலங்கும் -
விளங்குகின்ற, மல் வரைய தோளான் வளம் மா நகர் - மற்போர்த்தொழிலுக்கு
வரம்பாகவுள்ள புயங்களையுடையவனான துரியோதனனது சிறப்புக்களை
யுடைய பெரிய அத்தினாபுரியை, கண்டான் - பார்த்தான்; (எ - று.)

    உபப்பிலாவியத்துக்கும் அத்தினாபுரிக்கும் இடையிலுள்ள வழி இரண்டு
நாளைப்பிரயாணத்துக்குமேல் உள்ளதென்று தெரிகிறது.  ஐவகைநிலங்களுள்,
கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய நெய்தனிலம் உபப்பிலாவியத்துக்கும் -
அத்தினாபுரிக்கும் இடையில் இல்லையாதலால், கூறாது விடப்பட்டது.
இப்பாட்டில், 'சென்றருளி,' 'கண்டான்' என்ற வினைகளுக்கு, கீழ் 53 -
ஆங்கவியில் வந்த 'மாயோன்' என்பதே எழுவாய்.  மல்வரையதோளான்
என்ற தொடர்க்குக் கண்ணபிரானென்று பொருள்கொண்டால், இதுவே
எழுவாயாம்.