னன் அவனுக்குஉபசாரமாக அமைத்துவைத்த பந்தல் போன்றன கமுகம் என வருணித்தவாறு. மேவு - பொருந்திய என்றுமாம். குயிற்றுதல் - அமையச்செய்தல். நிரை நிரை - அடுக்கு, பன்மை பற்றியது. தாவும் வெம்பரித் தேரினான் தனக்கெதிர் என்பதற்கு - சூரியனுக்கு எதிராகவென்று உரைப்பாரு முளர். அடுத்தகவிகளில் "உம்பர்நாயகன் வரவு கண்டு" என்றும், "திருவின் கணவனுக்கெதிர் காட்டும்" என்றும், "நடந்தநாயகன்" என்றும் வருவனவற்றோடு இயையாவாதலால், அவ்வுரை சிறவாதாம். கமுகம் - கரமுகமென்பதன் திரிபு. இதுமுதல் நாற்பத்துநான்கு கவிகள் பெரும்பாலும் முதல் சீரும் ஐந்தாஞ் சீரும் மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடிநான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்; விருத்தக்கலித்துறை யெனவும், காப்பியக்கலித்துறையெனவும் படுபவை இவையே. (116) 57. | வம்புலாமகில்சந்தனம்வருக்கைமாகந்தஞ் சம்பகந்தமாலம்பலதிசைதொறுந்தயங்க உம்பர்நாயகன்வரவுகண்டுளங்களிகூர்ந்து தும்பிபாடினதோகைநின்றாடினசோலை. |
(இ -ள்.) சோலை - (அந்நகரத்தையடுத்த) சோலைகளிலே, வம்பு உலாம் - வாசனை வீசுகின்ற, அகில் - அகில்மரங்களும், சந்தனம் - சந்தனமரங்களும், வருக்கை - பலாமரங்களும், மாகந்தம் - தேமாமரங்களும், சம்பகம் - சண்பக மரங்களும், தமாலம் - பச்சிலைமரங்களும், பல திசைதொறும் - பலதிக்குக்களிலும், தயங்க - அசைந்து விளங்கா நிற்க, உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களிகூர்ந்து - தேவாதிதேவனான கண்ணபிரானது வருகையைப் பார்த்து மனம் களிப்பு மிகுந்து, தும்பிபாடின - வண்டுகள் பாடினவாக, தோகைநின்று ஆடின - மயில்கள் நிலைநின்று கூத்தாடின;(எ-று.) உயர்திணையும் அஃறிணையுமாகிய எல்லாப்பிராணிகளின் மனத்திலும் எம்பெருமான் எழுந்தருளியுள்ளவனாதலால், அவன் வருகையைக் கண்டு வண்டுகளும் மயில்களும் மகிழ்ச்சிகூர்வனவாயின. இனி, மூன்றாமடியை ஏதுத்தற்குறிப்பேற்றமாக்கி, சோலையின் இயற்கையைக் கற்பனைமுகத்தாற் கூறியதாகவுங் கொள்ளலாம். 'வம்பு உலாம்' என்பதைச் சந்தனம் முதலியவற்றிற்குங் கூட்டுக. அகில் - சந்தனம்போல நறுமணமுடையதொரு மரவிசேடம்; சம்பகம் - வண்டுணா மலர்மரங்களில் ஒன்று. பலதிசை - பத்துத்திக்குக்கள். முதல் இரண்டடிகளில், வண்டுகள் பாட மயில்கள் ஆடுவதைக் கண்டுங் கேட்டுஞ் சிரக்கம்பஞ்செய்து ஆநந்திக்குஞ் சனங்களாக மரங்களைக் கற்பித்த தென்னலாம். உம்பரென்னும் மேலிடத்தின் பெயர், அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயர். உம்பரென்பதில், உகரச்சுட்டு மேலிடத்தை யுணர்த்திற்று; இதன் எதிர்மொழி - இம்பர்; இவ்விடம். தோகை - சினையாகுபெயர். (117) |